• Thu. Mar 28th, 2024

முந்திரி ஆலை கொலை வழக்கில் திமுக எம்.பி ரமேஷுக்கு ஜாமீன்

Byமதி

Nov 19, 2021

கடலூர் மாவட்டம் பணிக்கன்குப்பம் பகுதியில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.வி.எஸ்.ரமேஷுக்கு சொந்தமான முந்திரி ஏற்றுமதி நிறுவனத்தில் பணியாற்றி வந்த மேல்மாம்பட்டை சேர்ந்த தொழிலாளர் கோவிந்தராசு கொலை செய்யப்பட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், திமுக எம்.பி. ரமேஷ், கடந்த அக்டோபர் 11ம் தேதி பண்ருட்டி நீதிமன்றத்தில் சரணடைந்தார். விசாரணைக்குப் பின் கடலூர் சிறையில் அடைக்கப்பட்ட அவர், ஜாமீன் கோரி கடலூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து ஜாமீன் கோரி எம்.பி. ரமேஷ், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி நிர்மல்குமார் முன் நேற்று விசாரணைக்கு வந்தபோது, எம்.பி.க்கு சலுகை காட்டப்பட்டுள்ளதாக பலியான கோவிந்தராசுவின் மகன் தரப்பில் குற்றம் சாட்டுவது தவறு எனவும், பாதுகாப்பு காரணங்களுக்காகவே அவர் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், ஒப்புதல் வாக்குமூலம் பதிவு செய்த பின் சிறையில் அடைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

கண்காணிப்பு கேமரா பதிவுகள் குறித்த தடயவியல் ஆய்வு அறிக்கைக்கு காத்திருப்பதாகவும், எந்த தலையீடும் இல்லாமல் விசாரணை நடைபெறுவதாகவும், மாநில அரசே வழக்கை சிபிசிஐடி க்கு மாற்றியது எனவும் புலன் விசாரணை நியாயமாக நடக்கிறது எனவும் விளக்கம் அளிக்கப்பட்டது.

புலன் விசாரணை அதிகாரி நியமிக்கும் வகையில் சிபிசிஐடியில் உள்ள வேறொரு அதிகாரியை பரிந்துரைக்க கோவிந்தராசு மகன் தரப்பிடம் நீதிபதி அறிவுறுத்தி உள்ளார். அரசு தரப்பு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி விசாரணை அதிகாரியாக விழுப்புரம் மாவட்ட சிபிசிஐடி ஆய்வாளர் சுந்தரராஜன் நியமிக்கப்பட உள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து வழக்கின் தீர்ப்பினை தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, திமுக எம்.பி ரமேஷுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரும் மனுமீது நவம்பர் 23ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *