தமிழகம் முழுவதும் கனமழை பெய்துவரும்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்தது. இந்த நிலையில், ரிஷிவந்தியம் பகுதியில் மட்டும் 165 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால் ரிஷிவந்தியம் பகுதியில் மழைநீர் சூழ்ந்துள்ளது.
இந்நிலையில், ரிஷிவந்தியம் முடியனூர் ஊராட்சியில், ஸ்ரீதர் என்பவருக்குச் சொந்தமான கோழிப் பண்ணை உள்ளது. நேற்று பெய்த கன மழையால், திடீரென்று வெள்ளநீர் கோழிப் பண்ணைக்குள் புகுந்ததுள்ளது. இதில், பண்ணையில் இருந்த சுமார் 4000 கோழிகளும் நீரில் மூழ்கி பலியானது.
இதையடுத்து, விஷயம் அறிந்து அங்கு வந்த பண்ணை உரிமையாளர் ஸ்ரீதர் உயிரிழந்த கோழிகளை கண்டு கதறி அழுதார். பின்னர், மழையால் நான் வளர்த்த 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான கோழிகள் இறந்தது மிகுந்த வேதனையாக இருக்கிறது. தமிழக அரசு அதிகாரிகள் உடனடியாக கோழிப் பண்ணையை பார்வையிட்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.