அரசியல் நாகரிகம் தெரியாமல் எம்.பி.யை, தி.மு.க.வின் அமைச்சர் ஒருவர் ஒருமையில் பேசிய விவகாரம் சரச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மேற்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சருமான கே.என். நேரு எதார்த்தமானவர், இயல்பாக பேசக் கூடியவர். வாயில் வருவதை சட்டென்று பேசி விடுபவர். இது பல நேரங்களில் அவருக்கு எதிராகப் போயிருக்கிறது. கட்சிக்கும் தர்மசங்கடத்தைக் கொடுத்துள்ளது.
அடிக்கடி ஏதாவது சர்ச்சையாகப் பேசி சிக்கிக் கொள்வது அவருக்கு வாடிக்கையாகி விட்டது. இது தேவையில்லாமல் திமுகவுக்குத்தான் சிக்கலை ஏற்படுத்துகிறது. அமைச்சர் கே.என். நேருவும் வாயைக் கட்டுப்படுத்துவதாக தெரியவில்லை, சர்ச்சையும் ஓய்வதாக தெரியவில்லை.
இப்படித்தான் முன்பு பீகாரிகள் குறித்து ஒரு வார்த்தையை அவர் வெளியிட அது டெல்லி வரை எதிரொலித்தது. பீகாரிகள் முட்டாள்கள் என்று அவர் பேசியிருந்தார். இது சர்ச்சையானது. இந்த நிலையில் கடந்த சட்டசபைத் தேர்தலின்போது கட்சியினருடன் அவர் ஆவேசமாக பேசிய வீடியோ வெளியானது. அதில் அவர் கெட்ட வார்த்தையில் பேசியதால் பலரும் முகம் சுளித்தனர்.
ஒரு மூத்த தலைவரே இப்படி அநாகரீகமாக பேசினால், அவரைப் பார்த்து கற்றுக் கொள்ளும் இளம் தலைமுறையினர் எப்படி இருப்பார்கள்.. இலக்கிய நயம் கலந்து பேசும் திமுகவில் இப்படி ஒரு தலைவரா என்றும் விமர்சனத்துக்குள்ளானார். இந்த நிலையில் தற்போது இன்னொரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.. இந்த முறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை எம்பி சு. வெங்கடேசனை அவன் இவன் என்று ஒருமையில் பேசியுள்ளார். செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், யாரிடம் கேட்க வேண்டுமோ அவர்களிடம் கேளுங்கள். வெங்கடேசன்னு ஒருத்தான் இருக்கான்.. அவன் கிட்ட கேளுங்க என்று சொல்கிறார் அமைச்சர் கே.என். நேரு. இதுதொடர்பாக ஒரு வீடியோவும் வலம் வருகிறது. இந்த வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் இலக்கிய உலகிலும், அரசியலிலும், மதுரை மக்கள் மத்தியிலும் மதிப்புக்குரியவராக இருப்பவர் எம்.பி. வெங்கடேசன். இவர் மதுரை எம்பியாக இருந்தாலும், தமிழக நலன் சார்ந்து தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர். அப்படிப்பட்டவரை, மக்கள் மத்தியில் மதிப்புடன் திகழ்பவரை அவன் இவன் என்று ஒருமையில் கூறியது சரியா என்று விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
மூத்த தலைவரான நேரு இப்படி தொடர்ந்து சர்ச்சையாக பேசிக் கொண்டிருப்பதை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூப்பிட்டுக் கண்டிக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. என்னதான் மனதில் பட்டதை இயல்பாகப் பேசக் கூடியவர் நேரு என்றாலும் கூட பொது வெளியில் சற்று கண்ணியமாக பேசுவதுதானே முறை.. எனவே கே.என்.நேருவுக்கு வாய்ப்பூட்டு போடுவாரா ஸ்டாலின்?. என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.