• Tue. Apr 16th, 2024

முதலமைச்சர் ஸ்டாலினிடம் சென்ற அமைச்சர்களைப் பற்றிய ரிப்போர்ட்..!

Byவிஷா

Nov 27, 2021

அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து ஒரு ரிப்போர்ட் தயாரித்து முதல்வர் ஸ்டாலினிடம் அதிகாரிகள் சிலர் வழங்கியுள்ளதாக கோட்டை வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியிருப்பது, அமைச்சர்களுக்கு கிலியை ஏற்படுத்தியுள்ளது.


தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் தன்னுடைய அமைச்சரவையை ‘அனுபவம் கொஞ்சம், அறிமுகம் கொஞ்சம்’ என்ற வகையில் அமைத்தார். தங்கள் துறையில் ஜொலிக்காத அமைச்சர்களை உடனடியாக மாற்றிவிட்டு புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்குவார், இதில் ஸ்டாலின் தந்தையின் வழியை அல்ல, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பாணியை தேர்ந்தெடுப்பார் என்று கூறப்பட்டது.


அதற்கு வலு சேர்க்கும் விதமாக அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து தன்னிடம் ரிப்போர்ட் கொடுக்குமாறு அதிகாரிகள் சிலரிடம் ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததாக சொல்கிறார்கள் மேலிடத்துக்கு நெருக்கமானவர்கள். அந்த அதிகாரிகளும் அமைச்சரின் அணுகுமுறை, துறை ரீதியான தெளிவு, திட்டங்களை செயல்படுத்தும் பாங்கு ஆகியவை குறித்து ஒரு ரிப்போர்ட் தயார் செய்துள்ளனர். இந்த ரிப்போர்ட் மு.க.ஸ்டாலினிடம் வழங்கப்பட்டுள்ளது. அதில் சீனியர் அமைச்சர்களின் செயல்பாடுகள் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. முதல்வர் ஸ்டாலினின் வேகத்துக்கு அவர்கள் ஈடுகொடுப்பதில்லை. பழைய பாணியை இவர்கள் கொஞ்சமும் மாற்றிக் கொள்ளவில்லையே என வருத்தப்பட்டுள்ளாராம்.


புதியவர்களில் ஒரு சில அமைச்சர்களுக்கு துறை ரீதியான தெளிவு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஸ்டாலின் இது குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகாரிகளிடத்தில் எழுந்தது. ஆனால் ஸ்டாலின் தற்போது எந்த தீவிர நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். அதற்கு பதிலாக புதிய நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார். அதன்படி துறை ரீதியாக நல்ல தெளிவில்லாத அமைச்சர்களுக்கு நன்கு அனுபவம் வாய்ந்த அதிகாரிகளை செயலாளர்களாக நியமிக்க வேண்டும் என்றும், அனுபவம் வாய்ந்த அமைச்சர்களுக்கு, கொஞ்சம் புதிய அதிகாரிகளை செயலாளர்களாக நியமிக்கலாம் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளாராம்.

ஏன் அமைச்சர்களை ஸ்டாலின் விட்டுப்பிடிக்கிறாரா, ஏன் உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை என்று விசாரித்தால் இதற்கான காரணத்தை கூறுகிறார்கள். ஆறு மாத காலம் என்பது மிகக் குறுகிய காலம். அதற்குள் மதிப்பிட்டுவிட முடியாது. திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகிறது.

ஆட்சிப் பொறுப்பேற்றதும் கொரோனா நெருக்கடி உச்சத்தில் இருந்தது. அதை சமாளித்துவிட்டு தான் அடுத்த பணிகளில் கவனம் செலுத்த முடியும் என அனைத்து அமைச்சர்களும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் களமிறக்கிவிடப்பட்டனர்.


அதன்பின்னர் பிற நலத்திட்டங்களை மேற்கொள்ள முடியாமல் நிதி நெருக்கடி முட்டுக்கட்டை போட்டதையும் சமாளித்து நிற்கும் நிலையில், தமிழகம் முழுவதும், மழை வெள்ளம் பாதிப்பு எழுந்துள்ளது. இதனால் மீண்டும் அனைத்து அமைச்சர்களும் வெள்ள நிவாரணம், மீட்பு பணிகளில் களம் இறக்கப்பட்டுள்ளனர். அதனால் அமைச்சர்களுக்கு மேலும் கொஞ்சம் அவகாசம் கொடுக்கலாம் என்பதே ஸ்டாலினின் தற்போதைய எண்ணமாக இருப்பதாக சொல்கிறார்கள் கோட்டை வட்டாரத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *