சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏவும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினின் 44வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. முதன்முறையாக எம்.எல்.ஏ.வாகி, வருகிற முதல் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது பிறந்த நாளை ஆடம்பரமான முறையில் கொண்டாட வேண்டாம் என்றும், மழைக்கான நிவாரண உதவிகள் மற்றும் மக்கள் நலத்திட்டங்களை அளிக்குமாறும் அறிக்கை ஒன்றை உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டிருந்தார். எனவே உதயநிதியின் பிறந்தநாளை ரசிகர்களும், கழக உடன்பிறப்புகளும், அமைச்சர்களும் நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர்.
இதனிடையே உதயநிதியின் பிறந்தநாளில் அவருக்கு வாழ்த்துச் சொல்ல நேற்றே அவரது வீட்டுக்கு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் என பலரும் படையெடுத்துள்ளனர். பிறந்தநாளையொட்டி மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி கொண்டிருந்த உதயநிதி, அந்த நிகழ்ச்சியை வேகவேகமாக முடித்துவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வெகு நேரம் காத்திருந்த அமைச்சர்களை பார்த்ததும், “மன்னிச்சிடுங்க. இன்னைக்கே வீட்டுக்கு வருவீங்கன்னு யோசிக்கலை” என பணிவாக அவர் பேசியதைக் கண்டு அமைச்சர்களும் எம்.எல்.ஏ.க்களும் ஆச்சரியப்பட்டனர். பின்னர் வாழ்த்துக்களை ஏற்றுக்கொண்டு நன்றி சொன்ன உதயநிதி, ” உங்க மாவட்டத்துல எந்த ஆடம்பரமும் கூடாது. நலத்திட்ட உதவிகள் மட்டும்தான் செய்யணும் அண்ணே!” என்று வாழ்த்திய அமைச்சர்களிடம் அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார் உதயநிதி.
சமூக வலைதளங்களில் HBDUdhay, Udhayanidhi Stalin உள்ளிட்ட ஹேஷ்டேக்குகள் வைரலாகி வருகின்றன.