• Sat. Mar 22nd, 2025

மத்திய அமைச்சர் உருவப்படத்தை எரித்து திமுகவினர் போராட்டம்

பாராளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் குறித்து அநாகரீகமாக பேசியதாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை கண்டித்தும், அவரது புகைப்படத்தையும் உருவ பொம்மையை எரித்தும் தமிழகம் முழுவதும் திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அதன்படி தேனி மாவட்டம் கம்பத்தில் இன்று மாலை தேனி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் கம்பம் எம்.எல்.ஏ ராமகிருஷ்ணன் தலைமையில் கம்பம் நகர செயலாளர்கள் வீரபாண்டியன் (வடக்கு), பால்பாண்டி ராஜா (தெற்கு ), சிபிஎம் ஏரியா செயலாளர் லெனின், காங்கிரஸ் நகரத் தலைவர் போஸ், காங்கிரஸ் கட்சியின் மாநில பேச்சாளர் ஆர்சி சிவமணி ஆகியோர் முன்னிலையில் திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியினர் கம்பம் நகர திமுக கட்சி அலுவலகத்திலிருந்து ஊர்வலமாக காந்தி சிலை வந்தடைந்தனர். அங்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர். பின்னர் மத்திய கல்வி அமைச்சரின் உருவப்படத்திற்கு தீ வைத்து எரித்தனர்.

அப்போது அங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கம்பம் தெற்கு எஸ்.ஐ அல்போன்ஸ் ராஜா தலைமையிலான போலீசார் திமுகவினர் கையில் வைத்திருந்த புகைப்படத்தை பறித்து தீயை அணைத்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக கொள்கை பரப்பு செயலாளர் இரா.பாண்டியன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் குரு குமரன், கம்பம் ஒன்றிய செயலாளர் தங்கபாண்டியன் மற்றும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.