• Sat. Mar 25th, 2023

ஊரே பாராட்டும் அமைச்சரை உள்ளூரில் பகைக்கும் திமுக நிர்வாகிகள்

தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் இருக்கும் திறமைகளை கண்டு ஊரே அவரை பாராட்டி வரும் நிலையில், மதுரையில் மட்டும் அவருக்கு எதிராக திமுக நிர்வாகிகள் சிலர் வெடிக்கத் தொடங்கியுள்ளனர்.
இதற்கு அண்மையில் நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மதுரை மேயர் வேட்பாளரை தேர்வு செய்த விவகாரம் தான் காரணமாக கூறப்படுகிறது.
இதனிடையே எதைப்பற்றியும் பொருட்படுத்தாமல் தனக்கு கொடுக்கப்பட்ட பணிகளில் மட்டும் கவனம் செலுத்தி மிஸ்டர் கூலாக வலம் வருகிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.
தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனை பொறுத்தவரை நிதி மேலாண்மை விவகாரத்தில் பழுத்த அனுபவம் கொண்டவர். உலக பொருளாதார விவரங்களை விரல் நுனியில் வைத்திருக்கக் கூடியவர். இதேபோல் போட்டி அரசியலில் ஆர்வம் காட்டாமல் தனக்கு தலைமை கொடுக்கும் பணிகளை மட்டும் செவ்வனே செய்யக்கூடியவர். பல்வேறு நிறுவனங்களில் உயர் பொறுப்புகளில் இருந்திருந்தாலும் கூட அதையெல்லாம் மறந்து இன்று தொண்டரோடு தொண்டராக மதுரையில் வலம் வரக்கூடியவர்.

ஊரே பாராட்டும் இப்படி ஒருவரை உள்ளூரில் மட்டும் அதாவது மதுரையில் அவருக்கு எதிராக திமுக நிர்வாகிகள் வெடிக்கத் தொடங்கியுள்ளனர். மதுரை மேயராக இந்திராணி என்பவரை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கொண்டு வந்தது மதுரை மாவட்டத்தின் திமுக மாவட்டச் செயலாளர்களுக்கும், மற்றொரு அமைச்சரான மூர்த்தி தரப்புக்கும் கடும் அதிருப்தியை கொடுத்திருக்கிறது.

அமைச்சர் மூர்த்தியை கட்சி நிர்வாகம் சமாளித்துக்கொண்டாலும் திமுக தரப்பில் முக்கிய நிர்வாகியான பொன் முத்துராமலிங்கத்தை சமாளிப்பது என்பது லேசு பட்ட காரியம் இல்லை. மதுரைக்கு யார் ராஜா ? பிடிஆரா , மூர்த்தியா , இல்லையென்றால் பொன் முத்துராமலிங்கமா என்ற கேள்வி தொண்டர்களிடையே எழுந்துள்ளது.அதிமுகவில் எப்படி செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் , ராஜன் செல்லப்பா என்ற மும்மூர்த்தியாக ராஜ்ஜியம் செய்கிறார்களோ அப்படி திமுகவில் செய்துவிட முடியாது.காரணம் மற்றவர்களை காட்டிலும் முதல்வருக்கு மிகவும் நெருக்கமான இடத்தில் இருக்கக்கூடியவர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன். அதுமட்டுமின்றி அவரது உத்தரவின்பேரில் தான் மதுரை மாவட்ட ஆட்சியர்,மதுரை மாநகராட்சி ஆணையர் என தனக்கு வேண்டியவர்களை அவர் பொறுப்பில் அமைத்துள்ளார்.

ஆனால் இதே செல்வாக்கு மற்றவர்களிடம் கிடையாது.பொன் முத்துராமலிங்கம் தனது மருமகளுக்கு மேயர் பொறுப்பு கேட்டு இரண்டு அமைச்சர்களிடமும் கேட்காமல் நேரடியாக திமுக தலைமை வரை சென்று முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து எடுத்துகூறியும் எதுவும் எடுபடவில்லை.அந்த அதிருப்தி தான் தற்போது வெடிக்க தொடங்கி உள்ளது.

இதனால் நிதியமைச்சர் பி.டி.ஆர்.மீது மனப்புழுக்கத்தில் இருந்து வருகிறது மதுரை திமுகவில் உள்ள ஒரு கோஷ்டி. ஆனால் இது குறித்தெல்லாம் சற்றும் அலட்டிக்கொள்ளாத நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனி ஒருவனாக, மிஸ்டர் கூலாக மதுரை திமுகவில் வலம் வந்துகொண்டிருக்கிறார். தனக்கென்று ஒரு தனி கோஷ்டியை உருவாக்க விரும்பாத அவர், மதுரை மாநகர வளர்ச்சித் திட்டங்களில் மட்டும் சமரசமின்றி செயல்படுகிறார்.

தமிழகத்தின் நிதி நிலைமை மிகவும் மோசமாக இருந்த நிலையில் அதனை படிப்படியாக மாற்றி வரும் பழனிவேல் தியாகராஜன், கடந்த வாரம் தமிழக பட்ஜெட்டை அனைத்து தரப்பினர் நலனையும் உள்ளடக்கிய வகையில் தாக்கல் செய்தார். இதனிடையே எனது அருமைச் சகோதரர் பிடிஆர் என முதல்வர் ஸ்டாலின் நேற்றைய தினம் அவரை பாராட்டியும் உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *