• Sat. Apr 20th, 2024

பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் மாவட்ட அளவிலான கலைத் திருவிழா

பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் கோவை மாவட்ட அளவிலான கலைத் திருவிழாவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் வழங்கினார்
கோவை கிக்கானி மேல்நிலைப்பள்ளி கலையரங்கத்தில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜி.எஸ்.சமீரன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இரா.பூபதி, மாவட்ட கல்விஅலுவலர்கள் பாண்டியராஜசேகரன்(இடைநிலை), புனிதா(தொடக்கநிலை), வள்ளியம்மாள் (பொள்ளாச்சி), கீதா(தனியார் பள்ளிகள்) கிக்கானி பள்ளி தலைமை ஆசிரியர் ஆனந்தி, மற்றும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் பலர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது,
பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் மாவட்ட அளவிலான கலைத் திருவிழாவில் பேச்சுப்போட்டி, கதை எழுததல், கட்டுரை போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல், பாடல் ஒப்புவித்தல், ஒவியம் வரைதல், தனிநடனம், குழுநடனம், ஒயிலாட்டம், தேவராட்டம், கும்மியாட்டம், கேலிசித்திரம் வரைதல், நாட்டுப்புற நடனம், இலக்கிய நாடகம், சமூக நாடகம், வாத்திய கருவிகள் வாசித்தல் உள்ளிட்ட 178 வகையான போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகளில் 428 பள்ளிகளை சேர்ந்த 7966 மாணவ மாணவியர்கள் கலந்துகொண்டனர். இப்போட்டிகளில் 1899 மாணவ மாணவியர்கள் முதல், இரண்டாம், மூன்றாம் இடம் பெற்றனர். பள்ளியில் கற்றுக்கொள்ளும் படிப்பு மட்டுமே ஒரு மாணவரை நல்ல சிறந்த மனிதனாக மாற்றாது. அதாவது, இன்றைய மாணவர்களிடம் பாடப்புத்தகத்தில் உள்ளதை படித்து தேர்வு எழுதி மதிப்பெண் வாங்குவது மட்டுமே நோக்கமாக உள்ளது.
பெற்றோர், ஆசிரியர், வயதான முதியோர் மற்றும் பெரியவர்களை மதிக்கவும், சக மனிதர்களோடு அன்புடன் பழகுவதும், பொறுமையாக இருப்பது, உள்ளிட்ட நல்ல குணங்களை வளர்த்து கொள்வது, தன்னம்பிக்கை உருவாக்குதல், போன்றவற்றை கற்றுகொடுத்து ஒரு மாணவனை நல்லமனிதனாக உருவாக்குவது, பள்ளிகளில் நடைபெறும் விளையாட்டுகள், கலைநிகழ்ச்சிகள், உள்ளிட்ட போட்டிகளாகும்.
பள்ளிகளில் நடைபெறும் பல்வேறு கலைநிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, சிறப்பாக செயல்படும் மாணவ-மாணவியர்கள், தங்கள் கல்லூரி காலங்களிலும் திறமைகளை வளர்ந்து கொண்டு சிறப்பாக செயல்படவேண்டும். பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு படிப்பு மட்டும் முக்கியம் என்று கருதாமல் படிப்புடன், விளையாட்டு, கலைபோன்ற போட்டிகளில் பங்குபெறவும் அவர்களை ஊக்குவிக்கவேண்டும். என தெரிவித்தார்.
தொடர்ந்து, பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் மாவட்ட அளவிலான கலைத் திருவிழாவில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் முதல்பரிசு பெற்ற 636 மாணவ மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *