• Sun. Jun 26th, 2022

மதுரை அருகே புதிய கல்வெட்டு கண்டுபிடிப்பு

ByA.Tamilselvan

Jun 10, 2022

நாடகக்கலை குழுவிற்கு வழங்கிய திருமலை மெச்சினார் என்ற சிறப்பு பெயரை பறைசாற்றும் கல்வெட்டு கண்டுபிடிப்பு ..

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் வட்டம் வலையங்குளம் கிராமத்தில் மன்னர் திருமலை நாயக்கர் வழங்கிய “திருமலை மெச்சினார்” என்ற பெயர் கொண்ட கல்வெட்டு கண்டறியப்பட்டது.

வலையங்குளத்தைச் சேர்ந்த வரலாற்று ஆர்வலர் வேல்முருகன் என்பவர் எங்கள் ஊரில் பழமையான கல்வெட்டு இருப்பதாக கொடுத்த தகவலின்படி மதுரை சரசுவதி நாராயணன் கல்லூரி வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியரும், பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் ஆய்வாளருமான முனைவர் து முனீஸ்வரன் தலைமையில் மாணவர்கள் அஜித்குமார், தினேஷ்குமார், சூரிய பிரகாஷ் , தர்மர் ஆகியோர் கொண்ட குழுவினர் மேற்பரப்பு கள ஆய்வு மேற்கொண்ட போது கண்மாய் கரை அருகில் விநாயகர் கோவில் முன்பு திருமலை மெச்சினார் என்ற பெயர் பறைச்சாற்றும் கல்வெட்டு கண்டறியப்பட்டது.இக்கல்வெட்டை படி எடுத்து ஆய்வு செய்த போது 312 ஆண்டுக்கு முன்பு வெட்டப்பட்டது என்பதை அறிய முடிகிறது.

இதுகுறித்து உதவிப் பேராசிரியர் முனைவர் து முனீஸ்வரன் கூறியதாவது

தமிழரின் தொன்மையான கலைகளில் ஒன்று நாடகம். கடந்த காலத்தையும், நிகழ் காலத்தையும், வருங்காலத்தையும் தன் அகத்தே காட்டுவதால் நாடகம் என பெயர் பெற்றது. குறிப்பாக தொல்காப்பியம், சிலப்பதிகாரம் போன்ற நூல்களின் தமிழ் நாடகக்கலை பற்றிய சான்றுகள் உள்ளது.

மதுரை நாயக்கர் ஆட்சி காலம்

மதுரையை ஆண்ட நாயக்கர்கள் கி.பி 1526 முதல் 1736 வரை நிர்வாகத்திலும் கலாச்சாரத்திலும் சிறப்பு பெற்று விளங்கினார்கள் . திருமலை நாயக்கர் ஆட்சி காலம் பொற்காலம். இவர் திருவிழா மற்றும் கலாச்சாரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். குறிப்பாக வலையங்குளம் பகுதியில் திருவிழா காலத்தில் 98 நாட்கள் தொடர்ச்சியாக புராணம் மற்றும் கலாச்சாரத்தை பறைசாற்றும் நாடகம் நடைபெறுவது வழக்கம்.

குன்றத்தூரில் திருமலை மெச்சினார் பட்டம்

வலையங்குளத்தை சேர்ந்த நாடகக் குழுவினர் திருப்பரங்குன்றம் கோவில் ராஜ வீதியில் வீர அபிமன்யு சுந்தரி நாடகம் நடத்தினார். திருமலை நாயக்கர் திருப்பரங்குன்றம் கோவிலுக்கு வருகை தந்த போது நாடகத்தை பார்த்து மெச்சிப்போனார் .நாடகக்குவினரை அழைத்து பாராட்டி திருமலை மெச்சினார் என்ற சிறப்பு
பட்டமாக தன் கையால் செம்பு பட்டயம் , 64 உப்பில்லா கட்டிகள் வழங்கினார். மேலும் குதிரை தன் ஆட்சி பகுதி எல்லையில் ஓடி விட்டு அக்குதிரை நிற்குமிடம் வரை நிலத்தில் விளையும் பொருட்களில் ஒரு பங்கு நாடக குழுவினருக்கு தரும்படி கட்டளையிட்டார் .அக்குதிரை ஓடிய இடத்தை எல்லையாக குறிக்கப்பட்ட பகுதி தற்போது குதிரை குத்தி என்று அழைக்கப்படுகிறது..

கல்வெட்டு செய்தி:-

வலையங்குளம் கண்மாய் அருகே ராணி மங்கம்மாள் சாலையின் ஓரமாக ஆலமரத்தின் அடியில் 3 அடி நீளம் 2 அடி அகலம் 10 வரிகள் கொண்ட தனி கருங்கல்லில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளது கண்டறிந்தோம் இக்கல்வெட்டு படி எடுத்து ஆய்வு செய்தோம் .இக்கல்வெட்டில் சாலிய வாகன சகாப்தம் 1710 வருடம் 15 திங்கட்கிழமை பூரண நட்சத்திரமும் கூடிய சுபதினத்தில் வலையங்குளத்தில் இருக்கும் திருமலை மெச்சினார் பெருமை பெற்ற நாடகக்கலை சங்கமறிய விநாயகர் கோவிலுக்கு திருப்பணி செய்து கட்டிக் கும்பாபிஷேகம் செய்தது. திருமலை மெச்சன் உபயம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு மூலம் திருமலை மெச்சினார் வம்சம் வலையங்குளம் விநாயகர் கோவிலுக்கு திருப்பணிகள் செய்ததை அறியமுடிகிறது.தற்போது வரை வலையங்குளத்தில் மட்டுமல்ல சுற்றி இருக்கின்ற கிராமத்தில் நடக்கும் விசேஷங்களில் திருமலை மெச்சினார் வம்சத்திற்கு தனி மரியாதை உண்டு. தொடர்ந்து தொன்று தொட்டு ஐந்தாவது தலைமுறையாக வலையங்குளத்தில் முதல் நாள் நாடகம் திருமலை மெச்சினார் நாடகக் குழுவினர் தான் அரங்கேற்றி வருகின்றனர்.தற்போது தான் 428 வது நாடகம் நடைபெற்றது .தமிழகத்தில் அதிகமான நாட்களில் நாடகம் நடக்கும் இடம் தான் வலையங்குளம் என்பது மற்றொரு சிறப்பு என்றார்.

Leave a Reply

Your email address will not be published.