மதுரையிலிருந்து திருநெல்வேலி வழியாக நாகர்கோவிலுக்கு இன்று காலை புறப்பட்ட அரசு குளிர்சாதனப் (ஏசி) பேருந்து, கூடுதல் கட்டணம் வசூலித்தும் போதிய பராமரிப்பின்றி ஓட்டை உடைசலாக இயக்கப்பட்டதால் பயணிகள் பெரும் அச்சத்துடன் பயணம் செய்தனர்.

திருநெல்வேலி பணிமனைக்குச் சொந்தமான TN 72 N 2036 என்ற பதிவெண் கொண்ட அரசு ஏசி பேருந்து, இன்று காலை மதுரையிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு நாகர்கோவில் நோக்கிப் புறப்பட்டது. சாதாரணப் பேருந்துகளை விடக் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் ஏசி பேருந்தில், சொகுசான மற்றும் பாதுகாப்பான பயணத்தை எதிர்பார்த்து ஏறிய பயணிகளுக்குப் பெரும் அதிர்ச்சியே காத்திருந்தது.
பேருந்தின் உட்புறத்தில் பல இடங்களில் தகடுகள் பெயர்ந்தும், இருக்கைகள் சேதமடைந்தும், ஓட்டை உடைசலாகப் பரிதாப நிலையில் காணப்பட்டது.

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பேருந்தின் வெளிப்புற மற்றும் உட்புறக் கட்டமைப்புகளே இவ்வளவு பலவீனமாக இருக்கும் நிலையில், நெடுஞ்சாலையில் அதிவேகமாகச் செல்லும்போது பிரேக் பிடிக்காமல் போனாலோ அல்லது வேறு ஏதேனும் இயந்திரக் கோளாறு ஏற்பட்டாலோ தங்களின் நிலை என்னவாகும் என்ற உயிர் பயத்துடனேயே பயணிகள் பயணிக்கும் அவல நிலை ஏற்பட்டது.

பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதில் காட்டும் அக்கறையைப் பேருந்து பராமரிப்பிலும் காட்ட வேண்டும் எனப் பயணிகள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர். பொதுமக்களின் உயிர்ப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, போக்குவரத்துத் துறை அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு, திருநெல்வேலி பணிமனையைச் சேர்ந்த இந்தப் பேருந்தை முறையாகப் பராமரித்துச் சீரமைக்க வேண்டும் என்றும், தரமான பேருந்துகளை மட்டுமே வழித்தடங்களில் இயக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


