பட்டினப் பிரவேச நிகழ்ச்சியில் ஆதீனகர்த்தரை பல்லக்கில் சுமக்க அனுமதி வழங்கியதின் மூலம் தற்போது நடப்பது ஆன்மீக அரசு என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மெய்ப்பித்திருப்பதாக தருமபுர ஆதீனம் பாராட்டு தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறையில் உள்ள தருமபுர ஆதீன மடத்தில் குருபூஜையை ஒட்டி ஆதீனகர்த்தரை பல்லக்கில் சுமந்து செல்வதற்கு எதிர்ப்பு கிளம்பியது. எனவே 22ம் தேதி நடைபெற இருந்த நிகழ்ச்சிக்கு மயிலாடுதுறை கோட்டாட்சியர் தடை விதித்திருந்தார்.
இதையடுத்து மரபுப்படி பட்டினப் பிரவேச நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கக்கோரி குன்றக்குடி, மயிலம், பேரூர் ஆதீனங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து கோரிக்கை விடுத்தன. வழக்கம் போல நிகழ்ச்சி நடைபெற ஆவண செய்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்திருந்தார். அதன்பின் ஆதீனகர்த்தரை பல்லக்கில் சுமந்து செல்ல விதிக்கப்பட்ட தடையை மயிலாடுதுறை கோட்டாட்சியர் நீக்கி உத்தரவிட்டார். தங்களது கோரிக்கையை ஏற்று அனுமதி அளித்த முதலமைச்சருக்கு தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
பல்லக்கு தூக்கும் நிகழ்ச்சிக்கு தடையை நீக்க ஆதரவு அளித்த அறநிலையத்துறை அமைச்சருக்கு நன்றி தெரிவித்த தருமபுரம் ஆதீனம், சர்ச்சை காரணமாக கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகமானோர் நிகழ்ச்சியில் பங்கேற்க வருவார்கள் என்று எதிர்பார்ப்பதாக கூறினார். வரும் 21ம் தேதி குருபூஜையும், 22ம் தேதி ஆதீனத்தின் பட்டினப் பிரவேச நிகழ்ச்சியும் நடைபெற இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.