வாலாஜாபாத் தரைப்பாலம் மூழ்கியதால் 50 ஆயிரம் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே, மாற்றுப்பாதையில் பேருந்துகளை இயக்க வேண்டும் என இந்திய தேசிய கிராமத் தொழிலாளர் சம்மேளனம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் அவளூர் சீனிவாசன், கலெக்டர் ஆர்த்தியிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது. பாலாற்றில் கடந்த 20 நாட்களாக வெள்ளம் பெருக்கெடுத்து செல்வதால் வாலாஜாபாத் பாலாற்று தரைப்பாலம் மூழ்கியது. இதனால் அவளூர், கன்னடியன்குடிசை, வரதராஜபுரம், ஆசூர், நெல்வேலி, கீழ்பேரமநல்லூர், அங்கம்பாக்கம் உள்பட 20க்கு மேற்பட்ட கிராமங்களில் உள்ள சுமார் 50 ஆயிரம் மக்கள், தங்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக வாலாஜாபாத் செல்லமுடியாமல் பெரும் சிரமம் அடைந்துள்ளனர்.
வாலாஜாபாத் செல்ல, களக்காட்டூர் வழியாக காஞ்சிபுரம் செல்வதற்கு சுமார் 50 கிமீ சுற்றி வரவேண்டியுள்ளது. இதனால் நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிகள் திறந்து மாணவர்கள் பள்ளிக்கு செல்லமுடியாத நிலை உள்ளது. மேலும் தனியார் பணி, கூலித் தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல முடியாத நிலையில் உள்ளனர். எனவே, கீழ்பேரமநல்லூர் செல்லும் டி69, இளையனார்வேலூர் செல்லும் டி 86 மற்றும் இந்த வழித்தடத்தில் செல்லும் தனியார் பேருந்துகளை, பாலாற்று பாலம் சரிசெய்யும்வரை களக்காட்டூர் வழியாக மாற்றுப்பாதையில் இயக்க அனுமதிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.