• Sat. Apr 27th, 2024

சபரிமலைக்கு ரூ.15 லட்சம் மதிப்புள்ள மளிகை பொருட்கள், காய்கறிகள் அனுப்பி வைப்பு

புன்செய் புளியம்பட்டியில் இருந்து சபரிமலைக்கு ரூ.15 லட்சம் மதிப்புள்ள 40 டன் மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் அனுப்பி வைக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம், புன்செய்புளியம்பட்டி, பந்தளராஜா யாத்திரைக்குழு ஐயப்ப பக்தர்கள், ஆண்டுதோறும், சபரிமலை சன்னிதானத்தில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி வரும், தேவஸ்தான போர்டு நிர்வாகத்திடம் அனுமதி பெற்று, அன்னதானத்திற்கு தேவைப்படும், காய்கறி மற்றும் மளிகை பொருட்களை வழங்கி வருகின்றனர். அதன்படி நடப்பு ஆண்டு, அன்னதானத்திற்கு தேவையான 50 மூட்டை அரிசி, 1000 கிலோ ரவை, 500 கிலோ கொண்டை கடலை, 600 கிலோ துவரம்பருப்பு, 350 கிலோ பனங்கருப்பட்டி, உளுந்தம் பருப்பு, சமையல் எண்ணெய், உள்ளிட்ட மளிகை பொருட்கள், மற்றும் தக்காளி, கேரட், பீன்ஸ்,உருளைக்கிழங்கு,பூசணி உள்ளிட்ட காய்கறிகள் என மொத்தம் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான 40 டன் மளிகை பொருள் மற்றும் காய்கறிகள் ஆறு லாரிகளில் ஏற்றப்பட்டு சபரிமலை சன்னிதானத்திற்கு, அனுப்பி வைக்கப்பட்டது.


இது குறித்து பந்தளராஜா யாத்திரைக்குழு தலைவர் வரதராஜ் கூறுகையில் சபரிமலை சன்னிதானத்தில், தேவஸ்தான நிர்வாகம் சார்பில் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்த அன்னதான பணியில், இணைந்து எட்டு ஆண்டுகளாக, காய்கறி வகைகளை அனுப்பி வருகிறோம். சபரிமலை தேவஸ்தான போர்டு நிர்வாகிகளிடம் ஒப்புதல் பெற்று, 9வது ஆண்டாக மளிகை பொருள், காய்கறிகள் என மொத்தம் 40 டன் பொருட்கள் சபரிமலைக்கு அனுப்பி வைத்துள்ளோம். இந்த ஆண்டு அகில பாரத ஐயப்ப சேவா சங்கம்,நிலக்கல் தேவசம் போர்டு,மணிகண்ட சேவா சமிதி ஆகிய இடங்களுக்கு கூடுதலாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 15 லட்சம் ரூபாய். மேலும், குழுவில் உள்ள ஐயப்ப பக்தர்கள், சபரிமலையில் நடக்கும், அன்னதான சேவை பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர் என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *