நீலகிரி மாவட்டம் உதகையிலிருந்து கூடலூர் வழியாக கேரளா மற்றும் கர்நாடகா செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் குறிப்பாக நடுவட்டம் பகுதியில் கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக மிக கனமழை கொட்டி தீர்த்த நிலையில் கடந்த நான்கு நாட்களாக காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு இதமான காலநிலை நிலவுகிறது.இந்நிலையில் உதகையிலிருந்து கூடலூர் வழியாக கர்நாடகா மற்றும் கேரளா செல்லும் தேசிய நெடுஞ்சாலை மலை பாதையில் அமைந்துள்ள தெய்வமகள் பகுதியில் கடந்த நான்கு நாட்களாக 70 மீட்டர் நீளத்திற்கு சாலை உள்வாங்குவதை அறிந்த தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் இன்று கோட்ட பொறியாளர் செல்வம் தலைமையில் பொறியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் சாலை விரிசல் ஏற்பட்டு சாலை உள்வாங்கும் பகுதியில் பூமிக்கடியில் பாறைகள் நகர்ந்து வருவதாக சந்தேகம் உள்ளதால் புவியியல் துறையினர் உடனடியாக ஆய்வு மேற்கொள்ள தேசிய நெடுஞ்சாலை துறையினர் புவியியல் துறையை அழைத்துள்ளனர்.
தொடர்ந்து சாலை உள்வாங்கி கொண்டிருப்பதால் வாகனங்களை அப்பகுதியில் மெதுவாக இயக்க நெடுஞ்சாலை துறையினர் வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தி வருகின்றனர். சாலை உள்வாங்கும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இதனிடையே நடு கூடலூர் பகுதியில் உள்ள இருபதுக்கும் மேற்பட்ட வீடுகளில் மிகப் பெரிய பிளவு ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதனால் நாளை புவியல் துறையினர் கூடலூர் பகுதியில் வீடுகளில் ஏற்பட்ட பிளவு மற்றும் சாலையில் ஏற்பட்ட விரிசல்களை ஆய்வு மேற்கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க உள்ளனர்.