• Fri. Jan 17th, 2025

சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணனுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!

ByIyamadurai

Jan 4, 2025

குற்றம் சாட்டுபவர்களுக்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது என்று மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணனுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி தந்துள்ளார்.

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள நகராட்சி திடலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 வது மாநில மாநாடு பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய அக்கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் திமுக அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை சுமத்தினார்.

அப்போது அவர் பேசுகையில், “ஆர்ப்பாட்டம், ஊர்வலம், போராட்டம் என்று சொன்னாலே காவல்துறை வழக்கு போடுகிறது. மாண்புமிகு மரியாதைக்குரிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நான் சில கேள்விகள் கேட்க விரும்புகிறேன்.தமிழ்நாட்டில் என்ன அறிவிக்கப்படாத அவசர நிலையை பிரகடனப்படுத்திவிட்டீர்களா நீங்கள்? எப்படி காவல்துறை இப்படி கட்டுப்பாடில்லாமல் செயல்படுகிறது? போராட்டத்தை கண்டு நீங்கள் அஞ்ச வேண்டிய அவசியம் என்ன?

ஒரு ஆர்ப்பாட்டம் நடந்தால் அதற்கு அனுமதியை ரத்து செய்து, கைது செய்துவிட்டால் முடக்கிவிட முடியுமா? இப்படிப்பட்ட போக்கை காவல்துறை மாற்றிக்கொள்ள வேண்டும்” என்று பேசினார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, இன்று கூறுகையில், “நேற்று முன்தினம் வரை இந்த ஆட்சியின் செயல்பாடுகளை மனதார புகழ்ந்தவர்தான் பாலகிருஷ்ணன். மகளிர் உரிமை திட்டம் என்றாலும் சரி, விடியல் பயணம் என்றாலும் சரி, புதுமைப்பெண் திட்டம் என்றாலும் சரி முதல்வருடைய செயல்பாடுகள் எதுவாக இருந்தாலும் அனைத்தையும் புகழ்ந்தவர்.

அவருடைய நெருடல் என்னவென்று புரியவில்லை. தெரிந்தால் அதற்குண்டான பரிகாரத்தை காண முடியும்.அதேநேரம், எங்களைப் பொறுத்த அளவில் ஜனநாயகப்படி போராடுவதற்கு உரிமை கோருவோருக்கு, மக்களுக்கு எந்தவித அசௌகரியமும் ஏற்படாமல் இருக்கும் வகையில் அனுமதி வழங்கப்படுகிறது. கடந்த காலங்களை எடுத்துப் பார்க்கின்ற பொழுது 2024 -ம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் கோரிக்கைகளுக்காக போராடியவர்களுக்கு அனுமதி தந்தது போல் வேறு எந்த ஆட்சியிலும் அனுமதி தரப்படவில்லை.எந்தவொரு போராட்டம் நடந்தாலும், உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களை அனுப்பி பேசி அந்த கோரிக்கைகளை நிறைவேற்றுகின்ற ஒரு அரசாக திராவிட மாடல் அரசு இருக்கிறது. சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களோடு கலந்து பேசி உடனடியாக அதற்கு நிவாரணம் காணுகின்ற அரசாகவும் இந்த அரசு இருந்து கொண்டிருக்கின்றது.

போராட்டங்கள் என்று வருகின்ற போது மக்களுடைய சராசரி வாழ்வு, தினசரி வாழ்வு பாதிக்கப்படக்கூடாது என்பது இந்த ஆட்சியினுடைய எண்ணம்.மேலும் போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் இருப்பதில்லை. அவர்கள்மீது எந்தவிதமான அடக்குமுறைகளோ பயன்படுத்தப்படுவதில்லை. முறையாக வழக்குப் பதிந்து அவர்களை மாலைக்குள்ளாக விடுதலை செய்கிறது காவல்துறை. இது சட்டத்தின் ஆட்சி.

அருமை அண்ணன் பாலகிருஷ்ணன் அவர்கள் நேற்றைக்கு வரை இந்த ஆட்சியை புகழ்ந்து கொண்டிருந்தவர்தான். வருங்காலங்களில் அவர் புகழ்கின்ற அளவிற்கு அவருடைய தேவைகளை நிச்சயமாக செவிசாய்த்து இந்த ஆட்சி நிறைவேற்றும். .எல்லோருக்கும் எல்லாம் என்று கூறும் நம் முதலமைச்சர், நிச்சயம் இப்பிரச்னையையும் களைவார். மற்றபடி குற்றம்சாட்ட வேண்டும் என்றே குற்றம் சாட்டுபவர்களுக்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது.” என்று தெரிவித்துள்ளார்.