• Sat. Apr 20th, 2024

பள்ளியில் மயங்கி விழுந்து 12ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு!

கொரோனா 2வது கட்டுக்குள் வந்ததை அடுத்து கடந்த ஒன்றாம் தேதி முதல் 9 முதல் 12 ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் பல்வேறு கல்லூரி மற்றும் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், பள்ளியில் மயங்கி விழுந்த மாணவி உயிரிழந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகாவிற்கு உட்பட்ட பகுதி பட்டணம் ஊராட்சி பகுதியில் வசித்து வருபவர்கள் செல்லத்துரை – மகாலட்சுமி தம்பதி, இவர்களுக்கு சிவசுந்தரி என்ற 16 வயது மகள் உள்ளார். சேரிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இன்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு புறப்பட்டுச் சென்ற சிவசுந்தரி, பள்ளி வளாகத்தில் திடீரென மயக்கம் விழுந்தார். இதையடுத்து அவரை ஆசிரியர்கள் நெகமம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் மேல் சிகிச்சை தேவைப்படுவதாக கூறியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிவசுந்தரியை அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கனவே சிவசுந்தரி இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவரது உடல் உடற்கூராய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மாணவி உயிரிழந்த சம்பவம் குறித்து நெகமம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவி சிவசுந்தரி உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தாரா, அல்லது வேறு ஏதேனும் காரணத்தினால் உயிரிழந்தாரா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *