• Wed. Oct 16th, 2024

சிவகாசியில் சாதி மதம் அற்றவர்கள் என சான்றிதழ் வாங்கிய தம்பதியினர்..

Byவிஷா

Jun 24, 2022

விருதுநகர் மாவட்டத்தில் முதல் முறையாக சாதி மதம் அற்றவர்கள் என தம்பதியர் சான்றிதழ் வாங்கியுள்ளனர்.
சிவகாசி அருகே உள்ள தேவர்குளம் பஞ்சாயத்து பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (35). பட்டதாரி இளைஞரான இவர், கணினி பயிற்சி மையம் நடத்தி வருகிறார். இந்நிலையில் இவர், கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிவகாசி தாலுகா அலுவலகத்தில் தனக்கும், தனது மனைவி சர்மிளாவுக்கும் சாதி, மதம் அற்றவர்கள் என சான்றிதழ் வேண்டும் என்று விண்ணப்பித்துள்ளார். இதையடுத்து விண்ணப்பத்தை பெற்ற அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபோன்றதொரு சான்றிதழ் இந்த தாலுகா அலுவலகத்தில் இதுவரை யாருக்கும் கொடுத்ததில்லை என்று கூறியுள்ளனர். அப்போது காத்திகேயன், இந்தியாவில் இதுவரை 7 பேர் சாதி, மதம் அற்றவர்கள் என்ற சான்றிதழ் பெற்றுள்ளார்கள். அதில் 6 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறி அதற்கான ஆதாரத்தை வழங்கியுள்ளார்.


பின்னர் சில நாட்களுக்குப் பிறகு அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி கார்த்திகேயன் மற்றும் அவரது மனைவி சர்மிளா ஆகிய இருவருக்கும் சாதி, மதம் அற்றவர்கள் என்ற சான்றிதழை வழங்கியுள்ளனர். இது குறித்து கார்த்திகேயன் கூறும்போது…
எனது சொந்த ஊர் சிவகாசி தான். நான் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னரே சாதி, மதம் அற்றவன் சான்றிதழ் கேட்டு மனு கொடுத்தேன். ஆனால் அப்போது இருந்த அதிகாரிகள் மறுத்துவிட்டனர். பின்னர் சான்றிதழ் பெற தேவையான ஆதாரங்களை சேகரிக்கத் தொடங்கினேன். இணையத்தில் அதற்கான ஆதாரங்கள் கிடைத்தது. இந்நிலையில், கடந்த 2018-ல் வக்கீல் சினேகா என்பவர் இதே போன்ற சான்றிதழை பெற்றிருந்தார். இதை ஆதாரமாக வைத்து தற்போது எனக்கும், எனது மனைவிக்கும் சாதி, மதம் அற்றவர்கள் என்ற சான்றிதழ் பெற்றுள்ளேன். நான் சுயமாக தொழில் செய்து வருகிறேன். எனது மனைவி சர்மிளா உதவி பேராசிரியராக பணியாற்றி தற்போது விடுப்பில் உள்ளார். எங்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர்களில் மூத்த மகன் நேசன் (4) தற்போது தனியார் பள்ளி ஒன்றில் யு.கே.ஜி. படித்து வருகிறான். அவனுக்கும் சாதி, மதம் அற்றவர் என்ற சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்து இருக்கிறேன். மேலும் 2வது மகன் கரிகாலனுக்கு தற்போது 2 வயதுதான் ஆகிறது. அவனுக்கும் இதே சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ளேன் என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *