• Fri. Mar 29th, 2024

சென்னை ஐ.ஐ.டி.யிலும் கொரோனா தொற்று

Byகாயத்ரி

Jan 12, 2022

சென்னையில் தொற்று அதிகரித்து மாணவர்-மாணவிகள் மட்டுமின்றி கல்லூரி ஆசிரியர்களும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. மாணவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர்.

இந்த நிலையில் சென்னை ஐ.ஐ.டி.யிலும் கொரோனா தொற்று பரவியது. அங்குள்ள 17 மாணவர்கள் உள்பட 53 பேருக்கு கடந்த 5-ந்தேதி முதல் 9-ந்தேதி வரையில் பரவியுள்ளது. ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள ஊழியர்கள் குடியிருப்பில் தங்கியுள்ளவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதையடுத்து ஐ.ஐ.டி.யில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில், கொரோனாவால் 58 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் விடுமுறை முடிந்து கல்லூரிக்கு திரும்பும் மாணவர்கள் கொரோனா பாதிப்பு இல்லை என்ற சான்றிதழ் கொண்டுவர வேண்டும். அல்லது ஒரு வாரம் தனிமைபடுத்திக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு ஐ.ஐ.டி. வளாகத்திலும் ஒட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து ஐ.ஐ.டி. இயக்குனர் பாஸ்கர் ராமமூர்த்தி கூறுகையில், ‘விடுமுறையில் சென்ற மாணவர்கள் மீண்டும் கல்லூரிக்கு வரும்போது மாநகராட்சியின் விதிமுறையின்படி கொரோனா பாதிப்பு இல்லை என்ற சான்றிதழ் கட்டாயம் கொண்டுவர வேண்டும். அல்லது ஒரு வாரம் தனிமைபடுத்திக்கொள்ள வேண்டும்’ என்றார்.இதுகுறித்து மாணவர்கள் கூறும்போது, ‘விடுமுறை முடிந்து கல்லூரிக்கு திரும்பும் போது கொரோனா பாதிப்பு குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டது. வகுப்பு மற்றும் ஆய்வுக்கூடத்துக்கு வரும்போது கொரோனா பரிசோதனை சான்றிதழ் அவசியமாக்கப்பட்டுள்ளது’ என்றனர்.

இதுகுறித்து மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் கூறும் போது, ‘இதுவரையில் 33 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்கள் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர்’ என்றனர்.ஐ.ஐ.டி.யில் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதுதவிர ஆராய்ச்சி மையங்களும் செயல்படுகின்றன. மாணவர்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சமூக இடைவெளியுடன் முக கவசம் அணிந்து வகுப்புகளில் பங்கேற்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *