• Wed. Apr 24th, 2024

இத்தாலி டு அமிர்தசரஸ் விமானத்தில் பயணித்த 125 பயணிகளுக்கு கொரோனா

இத்தாலியிலிருந்து பஞ்சாப் மாநில அமிர்தசரஸ் நகரத்துக்கு இன்று பிற்பகலில் வந்த விமானத்தில் 125 பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.


இதனால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மொத்தம் 19 குழந்தைகள் உள்ளிட்ட 179 பயணிகள் இருந்த இந்த விமானம், இத்தாலியின் மிலன் நகரிலிருந்து புறப்பட்டு, அமிர்தசரஸ் நகருக்கு பிற்பகல் 1.30 மணிக்கு தரையிறங்கியது. கொரோனா பரவல் அதிகமாக இருக்கும் நாடுகளில் இருந்து வரும் பயணிகள் அனைவருக்கும் கண்டிப்பாக ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்படும் என்று ஏற்கெனவே மத்திய அரசு தெரிவித்திருந்தது. அந்த வகையில் இத்தாலியில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், அங்கிருந்து வரும் பயணிகளுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 179 பயணிகளில் 125 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அமிர்தசரஸ் விமான நிலைய இயக்குநர் வி.கே.சேத் கூறுகையில், 125 பயணிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இவர்கள் தனிமை முகாமுக்கோ அல்லது ஹோட்டலுக்கோ அழைத்துச் செல்லப்படுவார்கள். ரோம் நகரிலிருந்து அமிர்தசரஸ் வந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த அனைவருக்குமே பாசிட்டிவ் என்பது தவறானது. அடிப்படை ஆதாரமற்றது. ரோம் நகருக்கு எந்த விமானத்தையும் ஏர் இந்தியா இயக்கவில்லை என தெரிவித்தார்.

இதற்கிடையே, அமிர்தசரஸ் விமான நிலையத்தில் ஏராளமான பயணிகள் கூட்டமாகக் காத்திருக்கிறார்கள். இத்தாலியில் புறப்படும்போது, தங்களுக்கு கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் வந்தது. இந்தியா வந்ததும் எவ்வாறு பாசிட்டிவ் வந்தது என அதிகாரிகளிடம் கேள்வி கேட்டு வருகின்றனர். இவர்களை சமாளிக்க முடியாமலும், வெளியே அனுப்ப முடியாமலும் அதிகாரிகள் திணறி வருகின்றனர். இந்தியாவில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் ஒரேநாளில் 65 சதவீதம் அதிகரித்து 90 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர். இந்தியாவில் தற்போது 2,85,401 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *