திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை கிராமத்தைச் சேர்ந்த பெண் சாமியார் ஸ்ரீ பவித்ரா காளிமாதா. இவர் காளி மாதா அகில இந்திய யுவ மோட்சா தர்மசார்யா பட்டம் பெற்றவர்.
திருவண்ணாமலை மகா தீபத்தை தரிசனம் செய்வதற்காக தலைமுடிக்கு சாயம், நடிகையை மிஞ்சும் மேக்கப், உதட்டில் லிப்ஸ்டிக், உடல் நிறைய தங்க நகைகள் அணிந்து சொகுசு காரில் திருவண்ணாமலைக்கு வந்தார். அப்போது, “உலக மக்கள் அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை. தமிழகத்தில் இன்னும் 3 மாதத்திற்கு பிறகு பயங்கர பிரளயம் ஏற்படும். 3 நாட்கள் முழு கடையடைப்பு நடக்கும். அதன் பின்னர் அமைதியான சூழ்நிலை உருவாகும்” என, பரபரப்பு பேட்டியளித்தார்.
இந்நிலையில், பெண் சாமியார் ஸ்ரீ பவித்ரா காளிமாதா 5 லட்சம் ரூபாய் மற்றும் 15 பவுன் நகை மற்றும் நில ஆவணங்களை அபகரித்துக் கொண்டதாக வீலி நாயக்கன்பட்டி தோட்ட குடியிருப்பைச் சேர்ந்த சாமியார் தவயோகி (60) என்பவர் நிலக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தார்.
இந்நிலையில், பெண் சாமியார் காளிமாதாவை நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குரு வெங்கட்ராஜ் தலைமையிலான போலீசார் கைது செய்ய முயன்றனர். அப்போது, பெண் சாமியார் காளிமாதா கதவை அடைத்து விட்டு தப்பி ஓடினார். அதன் பின்னர், திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இருந்து பெண் போலீசார் வரவழைக்கப்பட்டு அப்பகுதியில் தேடியபோது, அங்கு வீடு கட்டிக் கொண்டிருந்த பகுதியில் மறைந்து இருந்ததை போலீசார் கண்டு பிடித்து கைது செய்தனர். இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.