காலிஃபிளவர் பட்டாணி மசாலா:
தேவையான பொருட்கள்
காலிஃபிளவர் பூ – 1 சிறியது, பச்சைபட்டாணி – 100 கிராம், சின்ன வெங்காயம் – 100 கிராம், தக்காளி – 3, இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி, மல்லித்தூள் – 1 1ஃ2 தேக்கரண்டி, மிளகாய்தூள் – 1 தேக்கரண்டி, முந்திரி – 6, சோம்பு – 1ஃ2 தேக்கரண்டி, கசகசா – 1ஃ2 தேக்கரண்டி, பட்டை – 2 (1ஃ2 இன்ச் அளவு), கிராம்பு – 4, சீரகம் – 1ஃ2 தேக்கரண்டி, மிளகுதூள் – 1ஃ2 தேக்கரண்டி, எண்ணெய் – 2 தேக்கரண்டி, மஞ்சள் தூள் – 1 சிட்டிகை, கறிவேப்பிலை – 1 கொத்து, உப்பு – தேவையான அளவு
செய்முறை:
காலிஃபிளவரை சிறிது சிறிதாக நறுக்கி சுடுதண்ணீரில் போட்டு 3 நிமிடம் கழித்து வடிதட்டில் வடித்து எடுத்துக் வைக்கவும். பச்சைபட்டாணியை தனியே வேகவைத்துக் கொள்ளவும். அடுத்து சின்ன வெங்காயத்தையும், தக்காளியையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். முந்திரி, சோம்பு, கசகசா, சீரகம் ஆகியவற்றை தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். பிறகு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, கிராம்பு போட்டு தாளிக்கவும். அடுத்து நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு நறுக்கிய தக்காளியைப் போட்டு வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியதும், காலிஃபிளவர், பட்டாணி சேர்த்து நன்கு வதக்கவும். அதனுடன் மல்லித்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வதக்கி, அரைத்த முந்திரி சீரக விழுது சேர்த்து, காய் மூழ்கும் அளவு மட்டும் தண்ணீர் சேர்த்து காய் குழையும் வரை நன்கு வேக விடவும். காய் வெந்து குழம்பு நன்கு சுண்டியவுடன் மிளகுத்தூள், நறுக்கிய கறிவேப்பிலை சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.