மாணவி லாவண்யா தற்கொலைக்கு மதமாற்றம் காரணமில்லை என்று தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் உள்ள பள்ளியில் அரியலூர் மாவட்டம் திருமானூர் வடுகபாளையம் கீழத் தெருவை சேர்ந்த முருகானந்தம் என்பவரின் 17 வயது மகள் படித்து வந்துள்ளார். இவர் கடந்த ஜனவரி மாதம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட நிலையில் மதமாற்றம் செய்ய வற்புறுத்தியதன் காரணமாக சிறுமி தற்கொலை செய்து கொண்டதாக பாஜக, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட அமைப்புகள் கூறின. இந்த விவகாரம் பூதாகரமானது. அதேசமயம் மாணவி தற்கொலைக்கு மதமாற்றம் காரணம் என்பது உண்மையில்லை என உண்மை அறியும் குழு தெரிவித்தது.
இந்நிலையில் அரியலூர் மாணவி லாவண்யா மரணத்திற்கு மதமாற்றம் காரணம் இல்லை என தேசிய குழந்தைகள் நல ஆணையம் அறிக்கை தெரிவித்துள்ளது. இதன்மூலம் மாணவி தற்கொலை விவகாரத்தில் திட்டமிட்டு அவதூறு பரப்பி பாஜகவினரின் செயலும் அம்பலமாகியுள்ளது.மாணவியின் பெற்றோர், சகோதரருக்கு மனநல ஆலோசனை வழங்க தேசிய குழந்தைகள் நல ஆணையம் பரிந்துரைத்துள்ளது. உரிய பதிவின்றி செயல்பட்டு வரும் பள்ளி விடுதி மீது நடவடிக்கை எடுக்கவும், தமிழகம் முழுவதும் உரிய பதிவு இன்றி எத்தனை பள்ளி விடுதிகள் செயல்படுகின்றன என்பது குறித்து விசாரிக்கவும் தேசிய குழந்தைகள் நல ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
தஞ்சை பள்ளி விடுதியில் உள்ள மாணவர்களை வேறு பள்ளிக்கு மாற்றவும் தேசிய குழந்தைகள் நல ஆணைய அறிக்கையில் அறிவுறுத்தியுள்ளது. பள்ளி மாணவி லாவண்யா தற்கொலைக்கு மதமாற்றம் காரணம் என்று பாஜக மற்றும் இந்து அமைப்புகள் குற்றம் சாட்டி வந்த நிலையில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் இதுபோன்ற அவதூறு கருத்துக்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.