உசிலம்பட்டி பேருந்து நிலையம் முன்பு தொடர்மழையால் மரக்கிளைகளுக்குள் அறுந்து கிடந்த மின் வயரை எதிர்பாராத விதமாக தொட்டதில், மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 22வது வார்டு ராமத்தேவர் தெருவை சேர்ந்தவர் சுந்தர் என்ற முதியவர், கட்டிட தொழிலாளியான இவர் இன்று உசிலம்பட்டி பேருந்து நிலையம் எதிரே உள்ள பயணியர் நிழற்கூடை பின் புறம் ( சிறுநீர் ) இயற்கை உபாதையை கழிக்க சென்றுள்ளார்.
அப்பகுதியில் இன்று காலை முதலே பெய்து வரும் தொடர் மழையால் மின் வயர் அறுந்து மரக்கிளைகளுக்குள் விழுந்து கிடந்துள்ளது.
இதை அறியாமல் அவ்வழியே சென்ற சுந்தர் மரக்கிளை என நினைத்து மின் வயரை தொட்டதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீசார் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் மின் வாரிய அலுவலர்களும் நேரில் வந்து அறுந்து கிடந்த மின் வயரை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு சரி செய்தனர்.
எப்போதும் பயணிகள் அதிகம் கூடும் பேருந்து நிலையம் அருகிலேயே அறுந்து கிடந்த மின் வயரால் முதியவர் உயிரிழந்த சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.