• Sat. Apr 20th, 2024

திறந்த வெளியில் உள்ள நெல்குடோன்களுக்கு கட்டிடம் கட்டித் தர..,
ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ அரசுக்கு கோரிக்கை..!

Byவிஷா

Aug 5, 2022

திறந்த வெளியில் உள்ள நெல் குடோன்களுக்கு விரைவில் கட்டிடம் கட்ட வேண்டும் என மதுரை கிழக்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், அமைப்புச் செயலாளருமான ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருப்பதாவது..,
கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையால், மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தோப்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட, ஆஸ்டின்பட்டி மற்றும் மேலக்குயில் பகுதிகளில் திறந்த வெளிகளில் உள்ள நெல்குடோன்களில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து நெல் முளைத்திருக்கிறது. இது மிகுந்த வேதனை அளிக்கிறது. நான் ஏற்கெனவே சட்டப்பேரவையில் நடைபெற்ற கூட்டத்தொடரில் தோப்பூர் ஆஸ்டின்பட்டியில்; சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் 2 லட்சம் கொள்முதல் கொண்ட நெல்குடோன் திறந்தவெளியில் அமைக்கப்பட்டிருக்கிறது. அதற்கு பாதுகாப்பு வசதி செய்து தர வேண்டும் என சட்டப்பேரவையில் நான் கோரிக்கை வைத்தேன். அப்போது சட்டப்பேரவையில் அமைச்சர் சக்கரபாணி, வருங்காலங்களில் திறந்தவெளியில் நெல்குடோன்கள் இருப்பதை ஆய்வுமேற்கொண்டு உரிய கட்டிடங்கள் கட்டப்படும் எனத் தெரிவித்தார். 
ஆனால், கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையால் நெல் மூடைகள் அனைத்தும் முளைத்திருப்பதையும், தார்ப்பாய்கள் இல்லாமல் அனைத்தும் அழுகிய நிலையில் இருப்பதையும் கண்டு விவசாயிகள் வேதனை அடைந்துள்ளார். இதற்கு இந்த அரசே முழுபொறுப்பையும் ஏற்று வருங்காலங்களில் விவசாயிகளின் நலன் கருதி திறந்த வெளியில் உள்ள நெல்குடோன்கள் அனைத்திற்கும் கட்டிடம் கட்டித் தர வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தையும், அரசையும் கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *