• Thu. Apr 25th, 2024

1962-க்கு பிறகு தமிழகத்தில் காங்கிரஸ் கால் ஊன்ற முடியவில்லை – பிரதமர் மோடி பதிலடி

அரசு திட்டங்களின் மூலம் ஏழைகள் வீடு கட்டி லட்சாதிபதிகளாக மாறி வருகின்றனர் என்று மக்களவையில் பிரதமர் மோடி பேச்சு.
டெல்லி நாடாளுமன்றம் பட்ஜெட் கூட்டத்தொடரில் குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தீர்மானத்தின் மீது மக்களவையில் பேசிய பிரதமர் மோடி, பாடகி லதா மங்கேஷ்கருக்கு அஞ்சலி செலுத்தினார். பல்வேறு மொழிகளில் பாடல்களை பாடியது லதா மங்கேஷ்கரின் சிறப்பு என்றும் வேற்றுமையில் ஒற்றுமை என்பதற்கு சிறந்த உதாரணமாக திகழ்ந்துள்ளார் எனவும் புகழாரம் சூட்டினார்.
இதன்பின் ராகுல்காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களின் விமர்சனங்களுக்கு பதிலளித்து வரும் பிரதமர் மோடி, கொரோனாவுக்கு பிறகு உலகில் பல்வேறு மாறுதல்கள் ஏற்பட்டு வருகின்றன. கொரோனாவுக்கு பிறகு இந்தியா முன்னேற்ற பாதையில் சென்று கொண்டியிருக்கிறது. கொரோனாவுக்கு பிந்தைய சூழலில் உலகின் தலைமை நாடுகளில் ஒன்றாக மாற வேண்டும்.
உலகளவில் இந்தியாவின் குரல் ஒலிக்க வேண்டும் என்று தெரிவித்தார். மத்திய அரசு திட்டங்களால் லட்சாதிபதி என்ற நிலைக்கு ஏழைகளின் நிலை உயர்ந்துள்ளது. அரசு திட்டங்களின் மூலம் ஏழைகள் வீடு கட்டி லட்சாதிபதிகளாக மாறி வருகின்றனர். ஏழைத்தாய்கள் சமையல் எரிவாயு திட்டம் மூலம் பயனடையும் போது மகிழ்ச்சி ஏற்படுகிறது என்றும் குறிப்பிட்டார்.
நாடு முழுவதும் இன்று ஏழை மக்கள் வீடு, கேஸ் இணைப்பு, மற்றும் சொந்த வங்கிக் கணக்குகளை பெற்றுள்ளனர். ஆனால், எதிர்க்கட்சியினர் மனம் இன்னும் 2014 காலக் கட்டத்திலேயே சிக்கியுள்ளது என்று மறைமுகமாக விமர்சித்தார். ஏழைகளின் வங்கி கணக்கில் பணம் நேரடியாக சென்று சேர்கிறது.

1962-க்கு பிறகு தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியால் ஆட்சிக்கு வர முடியவில்லை என்றும் பல மாநிலங்களில் காங்கிரேஸை ஆட்சியில் அனுமதிக்க மக்கள் விரும்பவே இல்லை எனவும் தமிழகத்தில் பாஜக ஒருபோதும் ஆட்சிக்கு வர முடியாது என ராகுல்காந்தி பேசியதற்கு பிரதமர் மோடி பதிலடி கொடுத்தார். மேலும், காங்கிரஸ் கட்சியின் ஆட்சி பல இடங்களில் கைவிட்டு போன பிறகும் அகங்காரம் குறையவில்லை என்றும் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *