

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் தனித்துப் போட்டி என பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளான பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளுக்கு வரும் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் 21 மாநகராட்சிகளில் 1,374 வார்டுகள், 138 நகராட்சிகளில் 3,843 வார்டுகள், 490 பேரூராட்சிகளில் 7,621 வார்டுகள் என 12,838 வார்டுகளுக்கு இந்த தேர்தல் நடைபெற உள்ளது.
ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலைத் தொடர்ந்து தற்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் விஜய்யின் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் போட்டியிட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, விஜய் மக்கள் இயக்கம் அறிவித்திருந்தது. இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் தனித்துப் போட்டி என பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழ்நாட்டில் நடைபெறும் 2022-ம் ஆண்டின் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தளபதி அவர்களின் உத்தரவின் படி விஜய் மக்கள் இயக்கம் எந்த கட்சியுடனும் கூட்டணியோ, ஆதரவோ இல்லாமல் தனித்து போட்டியிடுகிறது.
எனவே தளபதி மக்கள் இயக்கத்தின் சார்பில் நிறுவப்பட்டுள்ள வேட்பாளர்களுக்காக அனைத்து மாவட்ட தலைவர்களும், அணி தலைவர்களும், ஒன்றிய, நகர, பகுதி தலைவர்களும், நிர்வாகிகளும், தொண்டர்களும், ரசிகர்களும் முழுமூச்சுடன் பிரச்சாரம் செய்து தளபதி மற்றும் விஜய் மக்கள் இயக்கத்தின் மூலமாக செய்த நற்பணிகளை வெற்றிபெற செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
