திமுக சொல்வதை எல்லாம் ஏற்பது காங்கிரஸ் வேலையல்ல: விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
விருதுநகர் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: உதய்பூரில் 3 நாட்கள் நடைபெற்ற காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, கட்சியில் முக்கியமான 5 மாற்றங்கள் நடக்க உள்ளன. பிரசாந்த் கிஷோர் காசு கொடுத்தால் ஆலோசனை சொல்லும் ஆலோசகர் மட்டுமே. அவர் கூறும் ஆலோசனையை ஏற்பதா, வேண்டாமா என்பதை காசு கொடுக்கும் காங்கிரஸ் கட்சிதான் முடிவு செய்யும். பிரசாந்த் கிஷோர் வாய்க்கு வந்ததை பேசுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.
பேரறிவாளனை ஒரு தியாகிபோல சித்தரித்து, அவரது விடுதலையைக் கொண்டாடுவது எவ்விதத்தில் நியாயம்.பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை விவகாரத்தில், திமுக கூட்டணியில் உள்ள மற்றகட்சிகள் ஒவ்வொரு நிலைப்பாடும், காங்கிரஸ் கட்சி வேறு நிலைப்பாடும் எடுத்துள்ளன. அதேபோல், திமுக சொல்வதை எல்லாம் ஏற்பது காங்கிரஸின் வேலை இல்லை. நாங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்வது திமுகவின் வேலையும் இல்லை.
சீமான் பாஜகவின் பி அணி.பேரறிவாளன் விடுதலை பாஜகவால் நடத்தப்படும் சதி. அதில் முக்கிய கதாபாத்திரம் சீமான்தான்.பெட்ரோல், டீசல் விலையை குறைக்காவிட்டால் கோட்டையை முற்றுகையிடுவோம் என பாஜக தலைவர் அண்ணாமலை கூறுகிறார். தமிழக பாஜகவில் வெறும்18 பேர்தான் உள்ளனர். அண்ணாமலை முற்றுகை, போராட்டம் என சீன் போடுகிறார்.2014-ம் ஆண்டு இருந்த பெட்ரோல், டீசல் விலை அளவுக்கு மத்திய அரசு குறைக்க வேண்டும். அப்படி பெட்ரோல், டீசல் விலையை குறைக்காவிட்டால் தீக்குளிப்பேன் என பிரதமர் மோடியிடம் கூற அண்ணாமலை தயாரா? குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டுத்தான் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைத்துள்ளது.இவ்வாறு மாணிக்கம் தாகூர் கூறினார்.
திமுக சொல்வதை கேட்கவேண்டிய அவசியம் காங்கிரஸுக்கு இல்லை – மாணிக்கம் தாகூர் எம்.பி பேட்டி
