ஈஷாவின் காவேரி கூக்குரல் சார்பில் ‘லட்சங்களை அள்ளித்தரும் சமவெளியில் மிளகு சாத்தியமே’ எனும் மாபெரும் கருத்தரங்கு பொள்ளாச்சியில் நடைபெற்றது. இதில் சமவெளியில் ஏற்றுமதி தரத்தில் மிளகு சாகுபடி சாத்தியமே என்று வல்லுநர்கள் தெரிவித்தனர்.
மலை சார்ந்த இடங்களில் மட்டுமே விளையும் என்று அனைவராலும் அறியப்பட்ட மசாலா பயிர் வகையான மிளகு, சமவெளியிலும் சிறப்பாக விளையும் என்பதை அனைத்து விவசாயிகளுக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் மிளகு சாகுபடி குறித்த கருத்தரங்கை காவேரி கூக்குரல் இயக்கம் ஒரே நாளில் தமிழ்நாட்டில் நான்கு இடங்களில் நடத்தியது.
பொள்ளாச்சியில் இக்கருத்தரங்கு ஆனைமலை அருகே அமைந்துள்ள முன்னோடி மிளகு விவசாயி திரு.வள்ளுவன் அவர்களின் சத்குரு சந்நிதி இயற்கை விவசாயப் பண்ணையில் நடைப்பெற்றது. இதில் வேளாண் விஞ்ஞானிகள், முன்னோடி மிளகு விவசாயிகள், புதிய ரக மிளகை கண்டுபிடித்து காப்புரிமை பெற்றவர்கள் எனப் பல வல்லுநர்கள் கலந்து கொண்டு மிளகு சாகுபடி குறித்த பலத் தகவல்களை விவசாயிகளுடன் பகிர்ந்து கொண்டனர்.
மிளகு சாகுபடியில் முன்னோடி விவசாயியான வள்ளுவன் பேசுகையில் “சமவெளியில் மிளகு சாத்தியமா என்ற கேள்வி எனக்குள்ளும் இருந்தது. ஆனால் ஈஷாவின் வழிகாட்டுதலின் கீழ் இது சாத்தியமாகி உள்ளது. பலப்பயிர் பல அடுக்கு முறை இங்கே பின்பற்றப்படுவதால் மைக்ரோ கிளைமேட் நிலை இயல்பாகவே உருவாகியுள்ளது. எனது தோட்டத்தில் தோராயமாக 2 டன் மிளகு மகசூல் கிடைப்பதால் குறைந்தது ரூ. 16 லட்சம் இதிலிருந்து வருவாய் ஈட்ட முடிகிறது. தென்னைக்குள் குறிப்பாக மரம் பயிர் சாகுபடியோடு இணைந்து மிளகு சாகுபடி செய்வது லாபகரமாக உள்ளது” என தெரிவித்தார்.
முன்னதாக புதுக்கோட்டையில் நடைபெற்ற கருத்தரங்கில் இருந்து நேரலையில் பேசிய காவேரி கூக்குரல் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் “தற்சமயம் தமிழ்நாட்டில் மூன்று மாவட்டங்களில் மட்டும் தோட்டக்கலை துறை சார்பாக, விவசாயிகளுக்கு மிளகு செடிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனை தமிழக அரசு மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்ட விவசாயிகளுக்கும் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்” என்ற கோரிக்கையை முன் வைத்தார்.
இந்திய நறுமணப் பயிர்கள் வாரியத்தின் இணை இயக்குனர் கனக திலீபன் “மிளகை எளிமையாக ஏற்றுமதி செய்வது ஏப்படி?” என்ற தலைப்பில் விரிவாக பேசினார். இவருடைய பேச்சு கருத்தரங்கு நடைபெற்ற மற்ற மூன்று இடங்களிலும் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
மேலும் மிளகு சாகுபடியில் முன்னோடி விவசாயியான திருமதி. நாகரத்தினம் “மிளகை மதிப்புக் கூட்டலாம் வாங்க” என்ற தலைப்பில் தனது தோட்டத்தில் மிளகு விளைவித்து, அதனை எப்படி மதிப்பு கூட்டி லாபம் ஈடுகிறார் என்பது குறித்து பேசினார்.
மேலும் இக்கருத்தரங்கில் அகளி மிளகில் காப்புரிமை பெற்ற முன்னோடி விவசாயி கே.டி. ஜார்ஜ் மிளகு சாகுபடி குறித்த தன் அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். அஸ்வினி, ஸ்வர்ணா மற்றும் ப்ரீத்தி என மூன்று புதிய மிளகு ரகங்களை கண்பிடித்த முன்னோடி விவசாயி ஏ.பாலகிருஷ்ணன் அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.
இது மட்டுமின்றி, கருத்தரங்க நிறைவுக்கு பின் பண்ணை பார்வையிடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் மூலம் விவசாயிகள் தங்களுக்கிருந்த பல்வேறு சந்தேகங்களை நேரில் பார்த்து கேட்டு தெரிந்து கொண்டனர். பொள்ளாச்சியில் நடைபெற்றது போலவே புதுக்கோட்டை, மயிலாடுதுறை மற்றும் கடலூரிலும் இக்கருத்தரங்குகள் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.