மாநிலங்களவை எம்.பி வேட்பாளர் தேர்தலில் வேட்பாளர்களை தேர்வு செய்வதில்அதிமுகவில் தொடர்ந்து இழுபறி நீடித்திவருகிறது.
பாராளுமன்ற மேல்சபைக்கு தமிழகத்தில் 6 இடங்கள் காலியாக உள்ளன. அதில் தி.மு.க. 4 இடங்களையும், அ.தி.மு.க. 2 இடங்களையும் கைப்பற்ற வாய்ப்பு உள்ளது.
தி.மு.க. 4 இடங்களில் ஒரு இடத்தை காங்கிரசுக்கு ஒதுக்கி உள்ளது. மீதமுள்ள 3 இடங்களுக்கு தஞ்சை கல்யாண சுந்தரம், கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், கிரிராஜன் ஆகிய 3 பேர் தி.மு.க. சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர். வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது. ஆனால் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் 2 வேட்பாளர்களும், காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ஒரு வேட்பாளரும் இன்னமும் அறிவிக்கப்படவில்லை.
காங்கிரஸ்வேட்பாளர்குறித்து சோனியா, ராகுல் ஆலோசனை நடத்துகிறார்கள். அதன்பிறகு இதில் முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது. ப.சிதம்பரத்துக்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் 2 வேட்பாளர்களை தேர்வு செய்ய கடந்த சில தினங்களாக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்கள். ஆனால் இதுவரை அவர்களுக்கு இடையே ஒருமித்த கருத்து உருவாகவில்லை.
அ.தி.மு.க. வேட்பாளர் 2 பேரில் ஒருவர் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளராகவும், மற்றொருவர் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளராகவும் இருப்பார் என்று முதலில் தகவல்கள் வெளியானது. அ.தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவரான செம்மலைக்கு மேல்சபை எம்.பி. பதவி கொடுக்க வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருக்கிறார். இதை ஓ.பன்னீர் செல்வம் தரப்பினரும் ஏற்றுக்கொண்டிருப்பதாக தெரிகிறது. ஆனால் மேலும் ஒருவரை தேர்வு செய்வதில்தான் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது. ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் தேனி மாவட்ட செயலாளர் சையதுகானுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று நிபந்தனை அளிக்கப்பட்டுள்ளது.
இதுவரை பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் அ.தி.மு.க வேட்பாளர் தேர்வு மீண்டும் மீண்டும் தள்ளி போகிறது. எனவே மனுதாக்கல் முடிவடைவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்புதான் அ.தி.மு.க. வேட்பாளர் பெயர்கள் அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
மாநிலங்களவை எம்.பி. வேட்பாளர் தேர்தல்-அதிமுகவில் இழுபறி
