

சில மாதங்களாக அதிமுகவில் ஏதாவது ஒரு சலசலப்பு இருந்துக்கொண்டே தான் வருகிறது. அதிலும் ரத்தமும் சதையுமாக இருந்த ஓ.பி.எஸ், இ.பி.எஸ் இடையே பதவி மோதல்கள் ஏற்பட்டது. தற்போது ஓபிஎஸ் தரப்புக்கு சாதகமாக இபிஎஸ் நடத்திய பொதுக்கூட்டம் செல்லாது, இபிஎஸ் இடைக்கால பொதுச்செயலாளரும் அல்ல என்று நீதிமன்றம் கூறிவிட்ட நிலையில் ஓபிஎஸ் தரப்பு கொஞ்சம் கம்பீரமாகவே வலம் வருகின்றனர்.
இவையெல்லாம் ஒரு புறம் இருக்க ஓபிஎஸ்-ன் சொந்த மாவட்டமான தேனி மக்களுக்கு அதிருப்தி தரும் வகையில் ஓபிஎஸ் நடந்ததாக தெரிகிறது.முன்பெல்லாம், ஓபிஎஸ் அதிமுகவில் பெரிய பதவி வகிப்பவர் முதல் அடிப்படை தொண்டன் வரை எந்த நிகழ்சியிலும் பங்கேற்பதயே தன் வழக்கமாய் கொண்டிருந்தார். ஆனால் சில காலங்களாக இதை அவர் கடைப்பிடிக்காத நிலை இருந்து வருகிறது. பெரும்பாலும் அவரது மகன்களேயே சில விழாக்களுக்கு அனுப்பி வைப்பதாக தெரிகிறது. இதனால் பலரும் ஓபிஎஸ் மீது அதிருப்தியில் உள்ளனர். இது என்ன காரணத்தினால் என்று தெரியாவிட்டாலும் தற்போது மீண்டும் தன் பழையை நிலையை கையில் எடுத்துள்ளார் ஓ.பி.எஸ்.

தன் சொந்த ஊரான தேனி ஆண்டிபட்டியில் அதிமுக இளைஞர் பாசறை செயலாளர் இல்ல விழாவில் பங்கேற்றுள்ளார். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தனியார் மண்டபத்தில் அதிமுக இளைஞர் பாசறை ஒன்றிய செயலாளர் நாகராஜ் இல்ல திருமண விழாவில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். திருமணத்திற்கு வருகை புரிந்த ஓபிஎஸ்-க்கு அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து, மேளதாளம் முழங்க சிறப்பான வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து இரண்டு வயது குழந்தை ஓபிஎஸ் தாத்தா என்று சத்தமாக அழைத்ததால் ,அவர் மகிழ்ச்சியில் நெகிழ்ந்து போனார். இந்நிகழ்வில் அதிமுக மாவட்ட செயலாளர் சையது கான், பெரியகுளம் ஒன்றிய செயலாளர் செல்லமுத்து, பெரியகுளம் கவுன்சிலர் அப்துல் சமது ,அதிமுக பொதுக்குழு உறுப்பினர் ஷேட்.பா. அருணாசலம் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த சம்பவம் அவரது ஆதரவாளர்களுக்கு மகிழச்சியை தந்துள்ளதாகவும் இதனை அவர்கள் வரவேற்பதாகவும் தெரிகிறது. பட்டாசு வெடித்து வரவேற்றதிலேயே அவர்கள் ஓபிஎஸ்-ஐ தன் வீட்டில் ஒருவராக நினைப்பதை இன்னும் மறக்கவில்லையென்று தான் சொல்ல வேண்டும். இதை பார்த்துக்கொண்டிருக்கும் இபிஎஸ்-க்கு கலக்கமாகவும், திமுக குழப்பமாகவும் இருந்து வருகிறது.

