• Fri. Apr 26th, 2024

சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை .. 4 மாதத்திற்குள் விசாரணையை முடிக்க உத்தரவு…

Byகாயத்ரி

Aug 29, 2022

சாத்தான்குளம் தந்தை – மகன் மரண வழக்கை 4 மாதத்திற்குள் முடிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பெனிக்ஸ் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காவல்துறை விசாரணையின் போது அடித்து கொலை செய்யப்பட்டனர். இது குறித்து சிபிஐ வழக்கு பதிவு செய்து 9 காவலர்களை கைது செய்தது. இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. விசாரணையை விரைவில் முடிக்க மாவட்ட நீதிமன்றத்திற்கு உத்தரவிடக்கோரி ஜெயராஜ் மனைவி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் சாத்தான்குளம் வழக்கு விசாரணை ஆறு மாதத்தில் முடிக்க ஏற்கனவே உத்தரவிட்டது. இருப்பினும் கொரோனா காரணமாக விசாரணை ஆறு மாதத்தில் முடிவடையவில்லை . எனவே விசாரணை முடிக்க கால அவகாசம் வேண்டும் என மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் தரப்பில் உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில் , விசாரணை முடிக்க ஐந்து மாதம் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டது. அத்துடன் மீண்டும் கடந்த 25 ஆம் தேதி செல்வராணி மனு விசாரணைக்கு வந்த நிலையில் , வழக்கில் 150 சாட்சிகள் உள்ளனர். இதுவரை 40 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளனர் . கடந்த வாரம் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதனால் விசாரணைக்கு கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி , சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கை விசாரிக்கும் நீதிமன்றத்தில் இதுவரை எத்தனை சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளார்கள்? எத்தனை சாட்சிகள் விசாரிக்கப்பட வேண்டும் ?விசாரணை முடிக்க எவ்வளவு காலம் வேண்டும்? என அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை இன்று ஒத்தி வைத்திருந்தது. இந்நிலையில் சாத்தான்குளம் தந்தை – மகன் மரண வழக்கு விசாரணையை 4 மாதத்திற்குள் முடிக்க, விசாரணை நீதிமன்றத்திற்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *