சேலம் அருகே தீண்டாமைச்சுவர் தொடர்பாக இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் விவகாரம் பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மோதல் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வழித்தடத்தை மீட்டுத்தர கோரி மனு அளித்துள்ளனர்.
சேலம் அருகே நங்கவள்ளியில் உள்ள ஆதிதிராவிடர் காலனியில் சுமார் 500 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். காலனில் இருந்து மேட்டூர் பிரதான சாலைக்கு செல்ல 52 ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர், தர்மலிங்கசெட்டியார் என்பவருக்கு சொந்தமான 38 அடி அகலத்தில் 740 அடி நீளம் கொண்ட இடத்தை நடைபாதைக்காக தானமாகப் பெற்றுக் கொடுத்துள்ளார். இதனை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்த நிலையில், தனியார் கல்லூரி நிறுவனம் ஒன்று அப்பகுதி மக்கள் சாலையை பயன்படுத்த முடியாதவாறு தீண்டாமை தடுப்பு சுவரை கட்டியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஆதிதிராவிடர் காலனி மக்கள் இரவோடு இரவாக தடுப்புச் சுவரை இடித்து அகற்றினர். இதனால் மற்றொரு தரப்பினர் இன்று காலை ஆதிதிராவிடர் காலனிகுள் புகுந்து அப்பகுதி மக்களை கடுமையாக தாக்கியுள்ளனர்.
இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தீண்டாமை சுவரை கட்ட ஆதரவாக செயல்பட்ட நங்கவள்ளி முன்னாள் ஒன்றிய தலைவர் ஜீவானந்தம் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ் நேரில் சந்தித்து மனு வழங்கினர்.