• Tue. Oct 8th, 2024

சாலையை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் சாலைமறியல்

சேலம் மாநகராட்சி 27வது கோட்டம் சத்திரம் பகுதியில் சாலையை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் சாலைமறியல் போலீசாருடன் வாக்குவாதம்.

சேலம் மாநகராட்சி 27வது கோட்டத்திற்குட்பட்ட சத்திரம் தெப்பக்குளம் முதல் லீபஜார் வரையிலான சாலை முக்கிய சாலையாக உள்ளது. இதில் லீபஜார் பகுதியில் மட்டும் காண்கிரீட் சாலை அமைக்கப்பட்டுவிட்டன. ஆனால் தெப்பக்குளம் பகுதியில் சாலை அமைக்கும் பணியை மாநகராட்சி நிர்வாகம் மெத்தனமாக செய்து வருகிறது.

இதனால் இந்த சாலையில் கடந்த சில மாதங்களாக கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் நகர பேருந்து நிலையத்தில் இருந்து வரும் பேருந்துகள் பால்மார்க்கெட், ரயில்வே மேம்பாலம் ஏறி லீபஜார் வழியாக செல்ல முடியாமல், சத்திரம் வழியாக நான்கு ரோடு செல்கிறது.


இந்த நிலையில், தெப்பக்குளம் பகுதியில் விரைவாக சாலை அமைத்துகொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும், அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு சாக்கடை மற்றும் பொது கழிப்பறை வசதிகள் செய்து கொடுக்கக் கோரியும் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தெப்பக்குளம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினரின் தடுப்புகளையும், மரக்கட்டைகளையும் எடுத்து சாலையில் போட்டு போக்குவரத்தை தடைசெய்தனர்.


இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் அங்குவந்து பொதுமக்களை களைந்து செல்லுமாறு கூறினர். அப்போது, சாலையில் நிறுத்தி வைத்திருந்த தடுப்புகளை அப்புறப்படுத்த முயன்றபோது போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிடச் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *