தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் 24-ந் தேதி தொடங்கிய உருமாறிய கொரோனா ஒமைக்ரான், 10 நாட்களுக்குள் 38-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இதனால் உலகமெங்கும் கட்டுப்பாடுகள் நாளுக்கு நாள் கடுமையாகி வருகின்றன.
இந்த ஒமைக்ரான், மிகப்பெரிய பயத்தை ஏற்படுத்தி இருந்தாலும், ஒரு ஆறுதலான தகவலும் வந்து இருக்கிறது. உலகின் முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசியான ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை உருவாக்கிய ரஷியாவின் கமலேயா தேசிய தொற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் நிபுணர் பேராசிரியர் அனட்டோலி ஆல்ட்ஸ்டீன் அவர்கள், ஸ்புட்னிக் ரேடியோவுக்கு அளித்த பேட்டியில்,

உருமாறிய டெல்டா வைரஸ் போய் விடும். அந்த இடத்துக்கு ஒமைக்ரான் வந்து விடலாம். ஆனால் இந்த பெருந்தொற்று அவ்வளவு ஆபத்தானது அல்ல. தற்போது 3 சதவீதம்பேர் இறக்கின்றனர்.
ஒமைக்ரான் வைரஸ் பரவினால், நோய் கிருமித்தன்மை குறைய வாய்ப்பு உண்டு. கொரோனா வைரஸ் காய்ச்சலுடன் ஒப்பிடத்தக்கது என்ற நிலைக்கு வந்தால், நாங்கள் பெருந்தொற்று முடிவுக்கு வந்து விடுவதாக கருதுவோம். எனவே இந்த பெருந்தொற்று, ஒமைக்ரானுடன் முடிவுக்கு வந்த விட வாய்ப்பு இருக்கிறது.
புத்தாண்டுக்கு முன்பாக ஒமைக்ரான் பரவி விடாது. அறிவியல் தரவுகள்படி பார்த்தால் ஒமைக்ரான் வைரசை பொருத்தமட்டில் நோயின் தீவிர போக்கை ஏற்படுத்தாது என அவர் கூறினார்.
இதே போன்று சிங்கப்பூர் சுகாதார அமைச்சகமும் ஒரு ஆறுதல் தகவலை கூறுகிறது. ஒமைக்ரான் வைரசுடன் தொடர்புடைய அறிகுறிகள், பிற உரு மாறிய வைரஸ்களைக் காட்டிலும் வேறுபட்டவை அல்லது தீவிரமானவை என்பதற்கோ, தற்போதுள்ள தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சை முறைகள் இந்த புதிய வைரசுக்கு எதிராக பயனற்றவைதான் என்பதற்கோ எந்த ஆதாரமும் இல்லை என்று சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் கூறுவதாக சேனல் நியூஸ் ஆசியா தெரிவித்தது.
சிங்கப்பூரில் மேலும் 2 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அது மேலும் தெரிவித்தது.