சென்னையில் சப்ளை செய்யப்படும் கேன் தண்ணீர் குறித்து பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில், நேற்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர்.
கோடை காலம் அதிகரித்துவிட்ட நிலையில் தற்போது தண்ணீரின் தேவை அதிகமாக இருக்கிறது. இன்றைய காலத்தில் பெரும்பாலானவர்களின் வீடுகளில் கேன் தண்ணீர் தான் பயன்படுத்தப்படுகிறது. இந்த கேன் தண்ணீர் குறித்து தற்போது பொதுமக்களிடமிருந்து பல்வேறு புகார்கள் வருவதால் சென்னையில் நேற்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
அதன்படி சென்னையில் அருகம்பாக்கம் மற்றும் கொண்டி தோப்பு உள்ளிட்ட பல பகுதிகளில் இருக்கும் கேன் தண்ணீர் சப்ளை செய்யும் கடைகள் மற்றும் தொழிற்சாலைகளில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அந்த ஆய்வின் போது ஐஎஸ்ஐ தர சான்று இல்லாமல் கேன் வாட்டர் விற்ற 6 கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதோடு அங்கிருந்த தண்ணீரும் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. அந்த ஆய்வில் தண்ணீரில் கெமிக்கல் ஏதேனும் கலந்திருப்பது தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.