• Fri. Mar 29th, 2024

தமிழகத்தில் கள்ளச்சாராயம் விற்றவருக்கும் இழப்பீடா..?எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

Byவிஷா

May 17, 2023

தமிழகத்தில் கள்ளச்சாராயத்தினால் பல உயிர்கள் பலியாகி இருக்கும் நிலையில், கள்ளச்சாராயம் விற்றவருக்கும் தி.மு.க அரசு இழப்பீடு வழங்குவது கேலிக்கூத்தாக இருக்கிறது என எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் அமாவாசை என்பவர் கள்ளச்சாராயம் விற்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார். அமாவாசையும் கள்ளச்சாராயம் குடித்திருந்ததால், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கும் அரசு ரூ.50 ஆயிரம் இழப்பீடும் வழங்கியதாகக் கூறப்படுகிறது. இது குறித்த விவரங்களைப் பகிர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் அரசுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி..,
”செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூரில் கள்ளச்சாராயம் குடித்து பலரும் உயிரிழந்துள்ள நிலையில், அதற்குக் காரணமானவர் என்று இந்த அரசு வழக்குப் பதிவு செய்துள்ள அமாவாசை என்பவர் திமுக ஒன்றிய உறுப்பினர் நாகப்பன் என்பவருடைய தம்பி ஆவார். குற்றம் சாட்டப்பட்டுள்ள அமாவாசை தானும் அந்த மதுபானத்தை அருந்தியதாக மருத்துவமனையில் தன்னை அனுமதித்துக் கொண்டார். இந்நிலையில் போலி மதுபான வழக்கில் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட அமாவாசைக்கு இந்த அரசு, போலி மதுபானத்தால் பாதிக்கப்பட்டவருக்கு வழங்கப்படும் ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கி இருக்கிறது. இதுதான் நவீன திராவிட மாடல் ஆட்சி போலும். சில நாட்களுக்கு முன்னாள் ஒருவர் தன்னை மாற்றுத்திறனாளி இந்திய கிரிக்கெட் கேப்டன் என்று பொய் சொல்லி முதல்வரைச் சந்தித்து பரிசு பெற்றுச் செல்கிறார்.
தற்போது என்னவென்றால் கள்ளச்சாராயம் காய்ச்சி உயிரைப் பறித்தவருக்கு அவரின் செயலை பாராட்டி பரிசு கொடுப்பதுபோல் நிவாரணம் கொடுக்கப்படுகிறது. இந்தியாவிலேயே, ஏன் இந்த உலகத்திலேயே குற்றவாளிக்கு நிவாரணம் வழங்கும் ஒரே அரசு தற்போது ஆட்சியிலுள்ள திமுக அரசு தான்” என டிவிட்டரில். பதிந்துள்ளார்.
மேலும் இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை:

”அமாவாசை  கைதிலிருந்து தப்பிப்பதற்காக தானும் கள்ளச்சாராயம் உட்கொண்டதாகக் கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நாடகமாடியுள்ளார் அவருக்கும் ரூ.50,000 இழப்பீடு வழங்கியுள்ளது இந்த திமுக அரசு எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *