• Sat. Apr 20th, 2024

பள்ளி கட்டிடங்களின் உறுதித் தன்மையை ஆய்வு செய்ய குழு-அமைச்சர் அன்பில் மகேஷ்

Byகாயத்ரி

Dec 18, 2021

தமிழ்நாட்டில் பள்ளி கட்டிடங்களின் உறுதித் தன்மையை ஆய்வு செய்ய குழு அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

நெல்லை டவுன் எஸ்.என். ஹைரோடு பொருட்காட்சி மைதானம் எதிரே உள்ள சாப்டர் மேல்நிலைப்பள்ளியின் கழிவறை தடுப்புச்சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் பலியாகினர். 4 மாணவர்கள் பலத்த காயமடைந்துள்ளனர். அவர்கள் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.உயிரிழந்த மாணவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்க ஏற்பாடு செய்யப்படட்து. அப்போது, உடல்களை வாங்க மறுத்து அவர்களின் உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதேசமயம், உயிரிழந்த 3 மாணவர்களின் உடல்களுக்கு சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் ராஜகண்ணப்பன், எம்எல்ஏக்கள் நயினார் நாகேந்திரன், அப்துல் வகாப் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். பேச்சுவார்த்தைக்கு பிறகு விஸ்வரஞ்சன் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அரசு அறிவித்த நிவாரண உதவியும் வழங்கப்பட்டது. பின்னர் அவர்கள் உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் சென்றனர். மற்றவர்களின் உடல்களையும் உறவினர்களிடம் ஒப்படைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
மேலும், விபத்து தொடர்பாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், டிசம்பர் 26ஆம் தேதி வரை பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பள்ளி வளாகம் போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.

நாளை முதல் பள்ளிக்கு யாரும் வரக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி விபத்து குறித்து பள்ளி தாளாளர் சகாய செல்வராஜ், பள்ளி தலைமை ஆசிரியர் ஞானசெல்வி மற்றும் கட்டட ஒப்பந்ததாரர் ஜான்கென்னடி ஆகிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தரமற்ற பள்ளி கட்டிடங்களை இடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *