• Wed. Dec 11th, 2024

கங்காணிக்கு கட்டபட்ட கல்லறை…வரலாறு பேசுது…

குன்னுாரில் உண்மை ஊழியனுக்கு கட்டப்பட்ட ஞாபக சின்னம்
நூற்றாண்டை நெருங்கிறது.

உண்மையாக உழைக்கும் ஊழியனுக்கு பெரும்பாலான நிறுவனங்களில் மரியாதையும் அங்கீகாரமும் கிடைப்பது அவ்வளவு எளிதல்ல ஆனால்
நீலகிரி மாவட்டத்தில் உண்மை ஊழியனுக்கு ஞாபக சின்னம் கட்டப்பட்டுள்ளது.

எதிர்வரும் 2023–ம் ஆண்டு இந்த ஞாபக சின்னம் நூற்றாண்டை நிறைவு செய்கிறது.
நீலகிரி மாவட்டம் குன்னூரிலிருந்து சுமார் 20 கி.மீ., தேயிலை எஸ்டேட்கள், வனத்தை கடந்தால் வருகிறது ட்ரூக் மற்றும் பக்காசூரன் மலை பகுதிகள். பக்காசூரன் மலையிலிருந்து மேட்டுப்பாளையம் நகரை தொட்டு விடும் தூரத்தில் பார்வையின் பார்வையில் கண்டு ரசிக்கலாம்.
பக்காசூரன் மலையில் ரம்மியமான தேயிலை தோட்டங்கள் பார்வையாளர்களை வசீகரிக்கும் நிலையில், அங்கு ஒரு கல்லறை வரலாற்றை விளக்குகிறது சற்று வித்தியாசமாக.
‘உண்மையான ஊழியனுக்கு ஞாபக சின்னமாக இந்த கல்லறை கட்டப்பட்டுள்ளது பிரமிப்பை ஏற்படுத்துகிறது.

பக்காசூரன் மலையில் ஆங்கிலேயர் காலத்தில் ட்ரூக் தேயிலை தோட்டத்தில் பணிபுரிய பலர் வரவழைக்கப்பட்டனர். இதில், மா.முனியன் என்பவர் தேயிலை தோட்ட தொழிலாளர்களை கண்காணிக்கும் கங்காணியாக பணியாற்றியுள்ளார். அந்த தேயிலை எஸ்டேட்டில் 1905-ம் ஆண்டு பணியில் சேர்ந்து 1923-ம் ஆண்டு அவர் இறக்கும் வரை பணிபுரிந்துள்ளார். 18 ஆண்டுகளுக்கு விசுவாசமாக பணியாற்றியவருக்கு, அவரது ஞாபக சின்னமாக கல்லறை கட்டப்பட்டுள்ளது. கல்லறையின் மேலே ஒரே கல்லில் மா.முனியன் குறித்த குறிப்பு செதுக்கியுள்ளனர். 47 வயதில் இறந்த மா.முனியனின் கல்லறையில் ‘உண்மையான ஊழியனுக்கு ஞாபக சின்னம்’ என செதுக்கியுள்ளனர்.


உண்மையான ஊழியர்களுக்கு பரிசுகள், வாகனம், வீடு என பரிசளிக்கப்படுவது வழக்கம். மா.முனியனுக்கு, அவர் இறந்த பின்னரும் பெருமை சேர்க்கும் வகையில் பக்காசூரன் மலையில் ஞாபக சின்னம் கட்டப்பட்டுள்ளது.
இதை ட்ரூக், மற்றும் பக்காசூரன் மலை வாழ்மக்கள் இன்றும் பாதுகாத்து வருகின்றனர்.

இந்நிலையில் 2023–ம் ஆண்டு இந்த ஞாபக சின்னம் நூற்றாண்டை நிறைவு செய்கிறது. வரலாற்று சிறப்பு மிக்க பக்காசூரன் மலைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்க இந்த கல்லறையும் உண்மை ஊழியனின் வரலாற்றை பறைச்சாற்றும்.