உத்தரபிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இதைத் தொடர்ந்து 5 மாநிலங்களிலும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் முகாமிட்டு அதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். தேர்தல் தேதி அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் நடைபெறவுள்ளதால் அந்த மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன. எனவே, சம்பந்தப்பட்ட மாநில மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணியை மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் விரைவுபடுத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக 5 மாநிலத் தலைமைச் செயலர்களுக்கும் தலைமைத் தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் பொதுமக்களுக்கு முதல் டோஸ் செலுத்துவது தாமதமாகி வருகிறது என்றும், முதல் டோஸ் போடும் பணியை விரைவுபடுத்த வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. இதுதொடர்பாக கடந்த வாரம்லக்னோவில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போதே, தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.