

வணிக பயன்பாட்டுக்கான கியாஸ் சிலிண்டர் விலை தமிழகத்தில் அதிரடியாக உயர்ந்துள்ளது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் சிலிண்டர் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. பெட்ரோல், டீசல் விலை தினமும், சிலிண்டர் விலை மாதம் தோறும் மாற்றியமைக்கப்படுகிறது. அந்த வகையில் ஒவ்வொரு மாதமும் முதல் நாளில் கியாஸ் சிலிண்டர் விலை நிலவரத்தை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன.
அந்த வகையில், மார்ச் மாதத்திற்கான சிலிண்டர் விலை நிலவரம் குறித்த அறிவிப்பை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளது. அதன்படி வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான கியாஸ் சிலிண்டர் விலை ரூ.5.50 உயர்ந்து 1,965 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் விலை மாற்றமின்றி 818.50 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
வணிக சிலிண்டரின் விலை கடந்த ஜூலை மாதம் முதலே மாதந்தோறும் தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதன் காரணமாக உணவகங்களில் உணவுப் பொருட்களின் விலை உயர்ந்து காணப்பட்டது. இதற்கிடையே கடந்த 2 மாதங்களாக சிலிண்டர் விலை குறைந்தது. இதற்கிடையே, இந்த மாதம் விலை உயர்ந்துள்ளது.

