

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நாச்சிகுளம் ஊராட்சிக்கு உட்பட்ட கரட்டுப்பட்டி கிராமத்தில் மதுரை- திண்டுக்கல் சாலையில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். மதுரை மாநகராட்சி குடிநீர் தேவைக்காக பைப் லைன் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் இப்பகுதியில் ஊராட்சி நிர்வாகத்திற்கு உட்பட்ட குடிநீர் பைப்புகளையும் போர்களையும் சேதப்படுத்தி வருகிறார்கள். ஊராட்சி மன்ற நிர்வாகம் மூலம் பலமுறை கோரிக்கை விடுத்தும் சிறிய அளவில் சரி செய்து வருகிறார்கள். இதனால் மீண்டும் மீண்டும் குடிநீர் பைப் லைன்கள் பெயர்ந்து விடுவதால் கரட்டுப்பட்டி, மேல் நாச்சிகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதன் காரணமாக இன்று திடீரென பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து மதுரை மாநகராட்சி அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஊராட்சி நிர்வாகத்திற்கு உட்பட்ட பைப் லைன்கள் பாதிக்காத வண்ணம் அதனை முறையாக சரி செய்து தர வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.
