• Wed. Apr 24th, 2024

பங்குனியில் தொடங்கும் சித்திரை திருவிழா…ஏப்.14 மீனாட்சி திருக்கல்யாணம்

உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா ஏப்ரல் 5 ஆம் தேதி கொடியேற்றதுடன் துவங்க உள்ளதை முன்னிட்டு இன்று கோவில் சார்பில் கீழமாசி வீதியில் உள்ள தேரடியில் கொட்டகை முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா வருகிற ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்றைய தினம் சாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது.

அதை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சாமியும், அம்மனும் பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி மாசி வீதியை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர்.

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக சித்திரை திருவிழா கோவிலுக்குள் உள் திருவிழாவாக நடைபெற்ற நிலையில் இந்தாண்டு பக்தர்கள் அனுமதியுடன் வெகு விமரிசையாக கோலாகலமாக நடைபெறும் எனவும் கூறப்படுகிறது. சித்திரை திருவிழா தொடங்க உள்ளதை முன்னிட்டு பந்தல் அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

சித்திரை திருவிழா நடைபெற உள்ளதை தெரிவிக்கும் வகையில் கோவில் சார்பில் கீழமாசி வீதியில் உள்ள தேரடியில் கொட்டகை முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. முன்னதாக மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து யானை, காளைகள் முன்செல்ல முகூர்த்தக்கால் ஊர்வலமாக எடுத்து தேரடிக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு மீனாட்சி அம்மன் கோவில் பட்டர்களால் சிறப்பு பூஜை செய்யப்பட்டு காலை 9 மணிக்கு மேல் முகூர்த்தகால் நடப்பட்டது.

தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 12 ஆம் தேதி மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகமும், மறுநாள் 13 ஆம் தேதி மீனாட்சி அம்மன் திக்குவிஜயமும் நடக்கிறது. அது முதல் மதுரையில் மீனாட்சி அம்மன் ஆட்சி நடைபெறுகிறது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் இந்தாண்டு தமிழ் புத்தாண்டு ஆன ஏப்ரல் 14 ஆம் தேதி அன்றைக்கு நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. அதையடுத்து ஏப்ரல் 15ஆம் தேதி தேரோட்டம் நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடைபெறும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *