• Tue. Apr 16th, 2024

முதல்வர் ஸ்டாலின் இந்தி கற்றுக்கொள்ள வேண்டும் – வெடிக்கும் திரிசக்தி சுந்தர்ராமன்

திமுகவில் முதலமைச்சர் ஸ்டாலின் வரும்காலத்தில் பிரதமராக வந்தால் நாடு செழிப்பாக இருக்கும் என்றும் திமுகவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் அறிவாலயத்தில் இருந்து தற்போது முதல்வருக்கு தூபம் போட துவங்கி உள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் இருந்து யாரும் இதற்கு முன் பிரதமர் ஆக கூடிய தகுதி இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து மூத்த பத்திரிகையாளர் திரிசக்தி சுந்தர்ராமன் நமது அரசியல் டுடேக்கு பிரத்யேகமாக அளித்த பேட்டியில் கூறியவை
தமிழகத்தில் தற்போது திமுக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இதற்கு மக்களிடையே நிறை குறை உள்ள நிலையில் அது குறித்து நாம் பேச வரவில்லை. திமுகவில் முதல்வர் ஸ்டாலின் பிரதமர் ஆக வேண்டும் என்ற ஆசை எழுந்துள்ளது. இதில் என்ன பெரிய தவறு உள்ளது. தமிழகம் செல்வ செழிப்பான மாநிலம், சமூக நீதி , மருத்துவம் கல்வி என பல கட்டமைப்புகளை திறம்பட செயல்பட கூடிய பல தலைவர்கள் தமிழகத்தில் இருந்து வந்துள்ளனர்.
காமராஜர் , அண்ணா , கலைஞர் , மூப்பனார் , ஜெயலலிதா போன்றவர்கள் தமிழக அரசியலில் முக்கிய தலைவர்களாக திகழ்ந்துள்ளனர். மேலும் கலைஞர் கருணாநிதியின் மறைவுக்கு பிறகு ஸ்டாலின் திறம்பட செயல்பட்டு வருகிறார். ஆனால் கலைஞரின் இடத்தை பிடித்து விட்டாரா என்று கேள்வி எழுப்பினால் இல்லை என்று தான் கூற வேண்டும். அவரவருக்கு தனி திறமை உண்டு. அதனை முன் வைத்து தான் அரசியல் செய்ய வேண்டிய நிலை உள்ளது. தற்போது ஸ்டாலின் இந்த நிலையை முன்னெடுக்க காரணம் என்ன சமூக நீதி நாள் அனுசரித்த பிறகு சமூக நீதி கூட்டமைப்பு என்ற கூட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று 37 கட்சிகளுக்கு கடிதம் எழுதினார்.
இதன் மூலம் தான் தேசிய அளவில் பிரச்சனைகளை பேசக்கூடிய ஒரு நபராக தன்னை முன்னிறுத்தி கொண்டார். ஆனால் ஸ்டாலினை தேசிய தலைவர்கள் அவர்களில் ஒருவராக ஏற்றுகொண்டார்களா என்று தெரியவில்லை. தற்போது ஸ்டாலினை பிரதமர் வேட்பாளராக தடுக்க நினைப்பது எது என்ற கேள்வி எதார்த்தமாக எழும், ஆங்கில புலமை வாய்ந்த அண்ணா , ஜெயலலிதா கூட பிரதமராக முடியவில்லை. காரணம் இந்தி தெரியாதது தான், இங்குள்ள திராவிட கட்சிகளுக்கு சேவையாற்றக்கூடிய திக கருப்பு சட்டை இயக்கங்கள் , இந்தி திணிப்பு என்ற பெயரில் இந்தி படிக்க கூடாது என்ற பிரச்சாரத்தை முன் வைத்து மக்களை குழப்பி வருகின்றனர்.


தமிழகத்தை தாண்டினால் நமக்கு இந்தி தெரியவில்லை என்றால் தடுமாறும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலைக்கு காரணம் திராவிட கட்சிகள் உருவாக்கிய இந்தி கற்றுக்கொள்ள கூடாது என்ற மாய பிம்பம் தான். பிரதமர் மோடி தமிழ் குறித்து அதிக இடத்தில் மேற்கோள் காட்டியுள்ளார். திருக்குறள், நாலடியார், அவ்வை குறித்து எல்லாம் மொழிபெயர்த்துகூறி வருகிறார். அதற்கு காரணம் தமிழகத்தில் பாஜக வளர வேண்டும் என்றால் தமிழர்களை கவர வேண்டும். அதற்காக தான் இந்த யுத்தியை மோடி எடுத்துள்ளார்.
இதனை தான் தற்போது ஸ்டாலின் கையில் எடுக்க வேண்டும். இந்தி கற்றுக்கொண்டால் மட்டும் தான் தேசிய தலைவர் என்ற பொறுப்பை குறித்து நீங்கள் யோசிக்க வேண்டும் மற்றப்படி நீங்கள் இந்தியை கற்ற்க்கொள்ள மறுத்தால் தமிழகத்தில் மட்டும் ஆட்சியில் இருந்து கொள்ளுங்கள்.தேசிய அரசியலை குறித்து யோசிக்காதீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *