மாநிலங்களவை தேர்தலில் ஆதரவு தருகிற திமுக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தோழமை கட்சிகளுக்கு நன்றி என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இன்று பகல் 12 மணியளவில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக மாநிலங்களவைத் தேர்தலில் என் வேட்பு மனுவை அளிக்கிறேன் என்று மகிழ்ச்சியுடனும், நன்றியுடனும் தெரிவித்துக் கொள்கிறேன். காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி அவர்களுக்கு என்னுடைய உளமார்ந்த நன்றி. எங்களுக்கு ஆதரவு தருகின்ற தி.மு. கழகம், அதன் தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் தோழமைக் கட்சியினருக்கு என் இதயம் நிறைந்த நன்றி என குறிப்பிட்டுள்ளார்.
திமுகவை சோ்ந்த டி.கே.எஸ்.இளங்கோவன், ஆா்.எஸ்.பாரதி, கே.ஆா்.என்.ராஜேஷ்குமார் , அதிமுகவைச் சோ்ந்த எஸ்.ஆா்.பாலசுப்பிரமணியம், ஏ.நவநீதகிருஷ்ணன், ஏ.விஜயகுமார், ஆகியோரின் பதவிக்காலம் நிறைவடைகிறது. இதையடுத்து, தமிழ்நாட்டில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கு ஜூன் 10ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தஞ்சாவூா் சு.கல்யாணசுந்தரம், ஆா்.கிரிராஜன், கே.ஆா்.என்.ராஜேஷ்குமார் ஆகியோர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. திமுக கூட்டணிக்கான 4 இடங்களில் காங்கிரசுக்கு ஓா் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அவ்வாறு ஒதுக்கப்பட்ட ஓர் இடத்தில் முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் போட்டியிருக்கிறார். வேட்பு மனு தாக்கல் நாளையுடன் நிறைவடையும் நிலையில், ப.சிதம்பரம் இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். இதனிடையே இதனிடையே தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் முகாம் அலுவலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நேரில் சந்தித்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தோழமை கட்சிகளுக்கு நன்றி: ப.சிதம்பரம் ட்வீட்
