• Tue. Apr 23rd, 2024

அணைகளில் இருந்து உபரிநீரை வெளியேற்றுவது குறித்து முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

அணைகளில் இருந்து உபரிநீரை வெளியேற்றும்போது முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச்செயலகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் கடலூர், மயிலாடுதுறை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து நேற்று ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து பரவலாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் நேற்று முன்தினம்) 37 மாவட்டங்களில் சராசரியாக 47.03 மி.மீ. மழை பெய்துள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏதேனும் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்தும், நிவாரண மையங்கள் குறித்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். 16 ஆயிரம் உணவு பொட்டலங்கள் சென்னையில் 169 நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை 16 ஆயிரம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளது என்ற விவரம் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தெரிவிக்கப்பட்டது.
மேலும், தொடர்ந்து மழை பெய்தால் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
மேலும், மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் சுமார் 40,500 ஹெக்டேர் நெற்பயிர் நீரில் மூழ்கியுள்ளது. இதனை விரைவில் வடியவைக்க உரிய நடவடிக்கை எடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். முன்னதாக, இந்திய வானிலை ஆய்வு மையத்தால் கனமழை முதல் அதி கனமழை வரை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், நீலகிரி, ராணிப்பேட்டை, திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களுக்கு தலா 1 குழு வீதம் தேசிய பேரிடர் மீட்புப்படையின் 92 வீரர்களை கொண்ட 4 குழுக்களை அனுப்பி வைக்கவும், கடலூர், சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், மயிலாடுதுறை மாவட்டங்களில் 163 வீரர்களை கொண்ட தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 5 குழுக்களை நிலைநிறுத்திடவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
மேலும், அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு, நீர் வரத்து ஆகியவற்றை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனவும், உபரிநீரை வெளியேற்றும் போது பொதுமக்களுக்கு உரிய முன்னறிவிப்பு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். கூட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தலைமைச்செயலாளர் இறையன்பு, கூடுதல் தலைமைச் செயலர் எஸ்.கே.பிரபாகர், போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜயந்த் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *