• Thu. Apr 24th, 2025

இன்றைய தினம் வரலாற்றில் பொறிக்கப்படும்- முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

ByP.Kavitha Kumar

Mar 22, 2025

நமது நாட்டின் வளர்ச்சிக்கு பங்களித்த மாநிலங்கள் நியாயமான தொகுதி மறுசீரமைப்பை உறுதி செய்வதன் மூலம் அதன் கூட்டாட்சி கட்டமைப்பைப் பாதுகாக்க ஒன்றிணைந்த நாள் இது. இன்றைய தினம் வரலாற்றில் பொறிக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் அடுத்த ஆண்டு தொகுதி மறுவரையறை மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மாநில வாரியாக மக்கள்தொகை அடிப்படையில் இந்த பணிகள் நடைபெறும் என்பதால், தமிழ்நாடு போன்ற மக்கள்தொகை வளர்ச்சியை கட்டுப்படுத்திய மாநிலங்களில் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என்று கூறப்படுகிறது. எனவே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதற்கு ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

இந்த நிலையில் மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த அனைத்துக் கட்சிக் கூட்ட தீர்மானத்தின்படி, கூட்டு நடவடிக்கைக் குழு அமைத்து தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாக இன்று மார்ச் 22-ம் தேதி சென்னையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

இதில் பங்கேற்க வருகைதந்துள்ள மாநில முதல்வர்கள், அரசியல் கட்சித் தலைவர்களை வரவேற்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக கேரள முதல்வர் பினராயி விஜயன், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்டோர் வருகை தந்துள்ளனர். அவர்கள் அனைவரையும் எக்ஸ் தளத்தில் டேக் செய்து முதல்வர் ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில், “நமது நாட்டின் வளர்ச்சிக்கு பங்களித்த மாநிலங்கள் நியாயமான தொகுதி மறுசீரமைப்பை உறுதி செய்வதன் மூலம் அதன் கூட்டாட்சி கட்டமைப்பைப் பாதுகாக்க ஒன்றிணைந்த நாள் இது. இன்றைய தினம் வரலாற்றில் பொறிக்கப்படும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.