• Tue. Jun 17th, 2025
[smartslider3 slider="7"]

பட்டாசு ஆலை வெடி விபத்தில் 6 பேர் பலி… முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு

ByP.Kavitha Kumar

Jan 4, 2025

சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த: 6 பேர் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் நிவாரணம் அறிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பொம்மையாபுரம் பகுதியில் உள்ள சாய்நாத் என்ற பட்டாசு ஆலையில் இன்று ஏற்பட்ட வெடி விபத்து ஏற்பட்டது. அந்த வெடி விபத்தில் நான்கு அறைகள் தரைமட்டமானது. அங்கு பணியில் இருந்த வேல்முருகன், நாகராஜ், காமராஜ், மீனாட்சிசுந்தரம், சிவகுமார், கண்ணன் ஆகிய 6 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. வேதிப் பொருட்களை கலவை செய்யும் போது உராய்வு காரணமாக திடீர் வெடி விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக ஆலை உரிமையாளர்கள் பாலாஜி, சசி பாலன், மேலாளர் தாஸ் பிரகாஷ் உள்ளிட்ட 4 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து வச்சக்காரப்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “விருதுநகர் மாவட்டம் மற்றும் வட்டம் கோட்டையூர் கிராமத்தில் செயல்பட்டுவரும் தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலையில் மருந்து கலக்கும் அறையில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த சிவகுமார் (56), குருந்தமடத்தைச் சேர்ந்த வேல்முருகன் ( 54) மற்றும் காமராஜ் ( 54), வீரார்பட்டியைச் சேர்ந்த கண்ணன் ( 54), அருப்புக்கோட்டையைச் சேர்ந்த மீனாட்சிசுந்தரம் ( 46), செட்டிக்குறிச்சியைச் சேர்ந்த நாகராஜ் (37) ஆகிய ஆறு நபர்கள் உயிரிழந்த துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

இவ்விபத்தில் காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஆவுடையாபுரத்தைச் சேர்ந்த முகமது சுதீன் என்பவருக்கு சிறப்பு சிகிச்சையளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன். மேலும், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சமும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ஒரு லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்,” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.