சென்னையில் கனமழை பெய்துவருவதால் செம்பரபாக்கம், பூண்டி, புழல் ஆகிய ஏரிகள் வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் உபரிநீர் திறக்கப்படுகிறது. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புயல் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் லேசான முதல் மிக கனமழை வரை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் நேற்று இரவு முதல் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னையின் முக்கிய நீர் ஆதாரமாக உள்ள செம்பரபாக்கம், புழல், பூண்டி ஆகிய ஏரிகள் வேகமாக நிரம்பி வருகிறது. சென்னையில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் பாதுகாப்பு கருதி செம்பரபாக்கம், புழல், பூண்டி ஏரியில் இருந்து விநாடிக்கு 100 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து கனமழை பெய்து நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேற்றம் மேலும் அதிகரிக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.