• Sat. Feb 15th, 2025

சீட்டா மற்றும் டான்செட்2025 நுழைவுத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

ByIyamadurai

Jan 24, 2025

சீட்டா மற்றும் டான்செட்2025 நுழைவுத் தேர்வுக்கு இன்று முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.

அண்ணா பல்கலையில் நடத்தப்படும் முதுநிலை பட்டப் படிப்புகளான எம்இ, எம்டெக், எம்பிளான், எம்ஆர்க் மற்றும் எம்பிஏ, எம்சிஏ ஆகிய படிப்புகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடக்க உள்ளது. இதையடுத்து, சீட்டா மற்றும் டான்செட்2025 நுழைவுத் தேர்வுக்கு இன்று முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது. மேற்கண்ட நுழைவுத் தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பிப்ரவரி 21.ம் தேதி வரை பதிவேற்றலாம்.

மேலும், இளநிலை பொறியியல் படிப்பில் இறுதி செமஸ்டர் படித்துக் கொண்டு இருக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். முதுநிலை பொறியியல் படிப்பில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வில் பங்கேற்க விண்ணப்பிக்கும் போதே, கவுன்சலிங் விண்ணப்பங்களையும் சேர்த்து பதிவேற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோர் http://tancet.annauniv.edu என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

இளநிலை படிப்பில் இறுதி செமஸ்டர் எழுதியவர்கள் மதிப்பெண் பட்டியல் இல்லாவிட்டாலும் இதற்கு விண்ணப்பிக்கலாம். எம்சிஏ, எம்பிஏ படிப்புகளுக்கு எஸ்சி, எஸ்சிஏ மற்றும் எஸ்டி பிரிவினர் ரூ.500 கட்டணமும், பிற வகுப்பினர் ரூ.1000 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். இவர்களுக்கான பொது நுழைவுத் தேர்வு மார்ச் 22-ம் தேதி நடக்கிறது. அதேபோல சீட்டா தேர்வுக்கு விண்ணப்பிப்போர், எஸ்சி, எஸ்சிஏ மற்றும் எஸ்டி பிரிவினர் ரூ.900, பிற வகுப்பினர் ரூ.1800 கட்டணம் செலுத்த வேண்டும்.

இவர்களுக்கான நுழைவுத் தேர்வு மார்ச் 23-ம் தேதி நடக்கிறது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் http://tancet.annauniv.edu/tancet என்ற இணைய தளத்தில் கட்டணங்களை செலுத்த வேண்டும். பிஇ, பிடெக் பட்டத்தை தொலை தூரக் கல்வி மூலமோ, அல்லது வார இறுதி நாட்களில் நடக்கும் வகுப்புகள் மூலமோ படித்தவர்களுக்கு நுழைவுத் தேர்வு எழுதி தகுதியில்லை. மேலும், 10, பிளஸ் 2, வகுப்பு, 3 ஆண்டு டிப்ளமோ படித்தவர்களுக்கும் எம்இ, எம்டெக், எம்ஆர்க் எம்பிளான், படிப்பில் சேரத் தகுதியில்லை என்று அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.