• Wed. May 25th, 2022

தமிழ் சினிமாவில் நூற்றாண்டை நெருங்கும் சௌகார் ஜானகி – சிறப்புக்கட்டுரை

காலமாற்றம், நாகரிக மாற்றம், வளர்ச்சி, தொழில்நுட்ப வளர்ச்சி என உலக இயக்கத்தில் ஒவ்வொரு நாளும் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன ஆனால் இந்திய சினிமாவின் வயது நூறுவருடங்கள் கடந்துவிட்டபோதும் ஆண்கள் ஆதிக்கம் இன்றுவரை மாறவில்லைபெண்கள் அழகுப் பதுமைகளாகவும், கவர்ச்சி காட்சிகளுக்கான கச்சா பொருளாக மட்டுமே தமிழ் சினிமாவில் இன்றுவரை இயக்குனர்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர்.

அத்தி பூத்ததுபோல கதையின் நாயகிகளாக சில படங்களில் கதாநாயகிகளை நடிக்க வைத்து வணிகரீதியான வெற்றிபெற்றாலும் அந்தப்போக்கு இங்கு தொடர்ச்சியாக இல்லை.


அப்படிப்பட்ட தமிழ் சினிமாவில் கதாநாயகிகளுக்கு திருமணம் ஆகிவிட்டால் அம்மா, அண்ணி, ஆண்டி கதாபாத்திரங்களுக்கு மட்டுமே நடிக்க வாய்ப்பு தரும் சினிமாவில் நடிகை சௌகார் ஜானகியின் திரையுலக பயணம் ஆச்சர்யத்துக்குரியதாகவே இன்றுவரை இருந்து வருகிறது.


பதின்பருவமான பதினைந்துவயதில் திருமணம் 16 வயதில் குழந்தைக்குத்தாய் அதன் பின்னர் சினிமாவில் நடிக்க வந்தசௌகார் ஜானகி. தென்னிந்திய சினிமாவில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழி படங்களில் கதாநாயகி, வில்லி, அம்மா, அக்கா, பாட்டி என பல்வேறு கதாபாத்திரங்களில் 70 ஆண்டுகளாக இயங்கி கொண்டிருப்பவர்.

என்.டி.ராமாராவ் அறிமுகமான படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் சௌகார் ஜானகி, எம்.ஜி.ஆர், சிவாஜி, நாகேஸ்வர ராவ், பிரேம்நசீர்,ராஜ்குமார் உட்பட அப்போதைய உச்ச நாயகர்களுடன் இணைந்து நடித்தவர், பொதுவெளியில் மக்களுடன் மக்களாகக் கலந்த, படாடோபம் இல்லாத வாழ்க்கையையே இன்றுவரை வாழ்ந்துவருகிறார்.

சிறிய இடைவெளிக்குப் பிறகு, கார்த்தி – ஜோதிகா நடிப்பில் உருவான தம்பி’ படத்தில் நடித்தவர், வயது மற்றும் மொழி எல்லைகளைத் தாண்டி சினிமா, தொலைக்காட்சி தொடர்கள் என இரண்டிலும் தொடர்ந்து பங்களித்து வருகிறார். காலம் கடந்து இந்திய அரசு நாட்டின் உயரிய விருதானபத்மஸ்ரீ விருது வழங்கி விருதுக்கு பெருமை சேர்த்துள்ளது என்றே கூறலாம்.

அதுவரை கவனிக்கப்படாமல் இருந்த சௌகார் ஜானகி ஊடகங்களின் கவனத்திற்கு உள்ளானார். அவரது கடந்தகால சினிமா வாழ்க்கை, அதற்கான போராட்டம் பற்றிய செய்திகள் வெளிவர தொடங்கியது அதனையொட்டி ஊடகங்களிடம் அவர் பேசிய விஷயங்கள் அதன் மூலம் வெளிப்பட்ட தகவல்கள் இன்றைய தலைமுறைக்கு புதியவையாக இருந்தன அவரது குரலில் இருந்து என் பூர்வீகம் ஆந்திரா.

குடும்பத்துல அப்பா உட்பட பலரும் படிச்சவங்க. 15 வயசுலேயே எனக்குக் கல்யாணம் ஆகிடுச்சு. என்னால பள்ளிப்படிப்பை முழுசா முடிக்க முடியலை. அப்பாவின் வேலை விஷயமா எங்க குடும்பம் அஸ்ஸாமில் இருந்தப்போ, நானும் என் கணவரும் அங்கே சில காலம் தங்கினோம்.

அப்போ கவுஹாத்தி பல்கலைகழகத்தில் படிப்பை முடிச்சேன். என் கணவருக்குச் சரியான வேலை அமையாததால எங்களுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுச்சு. முதல் குழந்தை பிறந்த பிறகு, என் கணவருடன் போய் சினிமாவுல வாய்ப்பு கேட்டேன்.

அதிர்ஷ்டவசமா செளகார்’ங்கிற தெலுங்குப் படத்துல வாய்ப்பு கிடைச்சு, தொடர்ந்து நிறைய படங்கள்ல நடிச்சேன். சினிமாவில் தொடர்ந்து நடிப்பதற்காக சென்னையிலேயே வீடு எடுத்துத் தங்கினோம். சினிமா தவிர, டைரக்டர் கே.பாலசந்தர் சார் உட்பட பலரின் மேடை நாடகங்கள்லயும் நடிச்சேன்.

சினிமாவுல நான் பேரும் புகழும் வாங்கினாலும், என் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமா அமையல. ஓரளவுக்கு வசதி வாய்ப்புகளோடு, தென்னிந்திய சினிமாவுல பிரபலமான நடிகையா உயர்ந்தபோதும், சிங்கிள் பேரன்ட்டா யாருடைய ஆதரவும் கிடைக்காம தனிப்பட்ட வாழ்க்கையில நான் எதிர்கொண்ட போராட்டங்கள் சொல்லி மாளாது.
அதுக்காக யாரையும் நான் குறைபட்டுக்கிட்டதில்லை.

சினிமாவுல கிடைக்கிற பேரும் புகழும் நிரந்தரம் இல்லைங்கிறதாலதான், ஆரம்பத்திலிருந்தே எல்லோரையும் போல இயல்பான வாழ்க்கைமுறையைக் கடைப்பிடிக்கிறேன். இந்தக் குணத்தால, பட வாய்ப்புகள் இல்லாதபோதும் எனக்கு பாதிப்பு ஏற்பட்டதில்லை என்கிறார் செளகார் ஜானகி.

இளையராஜாவின் திரையுலக பயணத்தில் மாபெரும் திருப்பத்தை ஏற்படுத்திய

மாலைப் பொழுதின் மயக்கத்திலே’

தேரோடும் வீதியிலே

கண் போன போக்கிலே கால் போகலாமா

புன்னகை மன்னன் பூவிழி கண்ணன்

போன்று இவர் தோன்றிய பாடல்கள் பலவும் காலம் கடந்தும் இன்றும் திரை இசை ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றன.


எனக்குப் பல படங்கள்ல வாய்ப்பு கொடுத்த கே.பாலசந்தரின் தில்லு முல்லுபடத்துல நடிச்சது மறக்க முடியாத அனுபவம். அந்தப் படத்துல பைப் வழியே வீட்டுக்குள்ள நான் வரும் காட்சியைப் பத்தி சொன்ன பாலசந்தர், உங்களால பண்ண முடியுமா?’ன்னு கேட்டார்.ரிகர்சல் வேணாம். நீங்க ஆக்க்ஷன் சொல்லுங்க’ன்னு சொல்லி, அந்தக் காட்சியை ஒரே டேக்ல நடிச்சு முடிச்சேன். பாலசந்தர் உட்பட படக்குழுவினர் பலரும் கைதட்டி என்னைப் பாராட்டினாங்க.

பல படங்கள்ல மாடிப்படியிலேருந்து உருண்டு கீழே விழுற மாதிரியான காட்சிகள்ல டூப் இல்லாம நானே நடிச்சிருக்கேன். சம்பளம் உட்பட பல வகையிலயும் ஏமாற்றங்களைச் சந்திச்சிருந்தாலும், உழைப்புல மட்டும் யாருக்கும் நான் குறை வெச்சதில்லை. தயாரிப்பாளர்களுக்கும் எந்த வகையிலும் சிரமம் கொடுத்ததில்லை.

தமாஷான ஒரு விஷயம் சொல்றேன். ஒரே காலகட்டத்துல நானும் பின்னணிப் பாடகி எஸ்.ஜானகியும் சினிமாத்துறையில வேலை செஞ்சதால, ரசிகர்கள் எனக்கு அனுப்பும் லெட்டர்ஸ் பலவும் அவங்க வீட்டுக்கும், அவங்களுக்கு வர வேண்டிய லெட்டர்ஸ் எனக்கும் வந்திடும். இதே மாதிரி போன் அழைப்பிலும் குளறுபடிகள் நடக்கும். ஒருகட்டத்துல பல ஆவணங்கள்லயும் செளகார் ஜானகி’னு என் பெயரை மாத்திக்கிட்டேன்.

பலரும் என் சிகையலங்காரம் பத்தி கேட்பாங்க. என் உடலுக்கு ஹேர் டைஒத்துக்காதுனு தெரிஞ்சு, ஷூட்டிங் தவிர்த்து, தனிப்பட்ட முறையில அதைப் பயன்படுத்தவே மாட்டேன். நீளமான நரைமுடியுடன் இருக்கிறதுலயும், நரைமுடியில ஜடை பின்னிக்கிறதுலயும் எனக்கு விருப்பமில்லை.

அதனால்தான்பாப் கட்’ ஸ்டைலுக்கு மாறினேன். பராமரிப்புக்குச் சுலபமா இருக்கிறதால பல வருஷமாவே இதே ஸ்டைல்ல சிகையலங்காரம் பண்ணிக்கிறேன் என்கிறார்.


ஆங்கில மொழி புலமை கொண்டவர் தொலைக்காட்சி, தினசரிசெய்தித்தாள், யூடியூப் வாயிலாக உலக நிகழ்வுகளை உடனுக்குடன்தெரிந்துகொள்வதில் ஆர்வம் கொண்டவராக இருக்கிறார்என் அம்மாவுக்குச் சமையல் மற்றும் ஆன்மிகத்துல அதிக நாட்டம். இந்த ரெண்டு விஷயத்துலயும் எனக்கும் ஆர்வம் அதிகம்.

சமையல், பாத்திரங்களைக் கழுவுறது, துணிகளைத் துவைச்சுக்கிறதுனு எனக்கான வேலைகளை நானே செஞ்சுப்பேன். என் மூத்த பொண்ணு சென்னையில இருக்கா. இளைய மகளும் மகனும் பேரப்பிள்ளைகளும் அமெரிக்காவுல இருக்காங்க. குடும்பத்தினர் ஒண்ணு கூடினா திருவிழா கணக்கா இருக்கும். அவங்க எல்லோருக்கும் நானே சமைச்சுப்போடுற அளவுக்கு மனசுலயும் உடம்புலயும் இன்னும் எனக்குத் தெம்பு இருக்கு.


எனக்கு 90 வயசு முடிஞ்சதால, கடந்த டிசம்பர்ல குடும்பத்தினர் என்னை சர்ப்ரைஸா சென்னைக்கு வர வெச்சாங்க. எல்லோரும் சேர்ந்து எளிமையான முறையில என் பிறந்தநாளைக் கொண்டாடினாங்க. கொரோனா அதிகமானதால இன்னும் சென்னையிலேதான் இருக்கேன். எப்பவும்போல, சென்னையிலிருக்கும் இப்போதுகூட எனக்கான சமையல் வேலைகளை நானேதான் செஞ்சுக்கிறேன். சமீபத்துல தெலுங்குல ஒரு படம் நடிச்சேன்.


கொரோனா பிரச்னை குறைஞ்சதுக்குப் பிறகு, நல்ல வாய்ப்புகள் வந்தா மட்டும் நடிப்பேன். நிறைவான வாழ்க்கையை வாழ்ந்ததா சந்தோஷம் ஏற்பட்டிருக்கு. என்ன நடந்தாலும் நமக்கான வாழ்க்கையை மகிழ்ச்சியா அமைச்சுக்கிறது நம்ம கையிலதான் இருக்கு. எல்லாத்துக்குமே மனசுதான் காரணம் என்கிறார் ஐந்து தலைமுறைகளை கடந்து இருக்கும் சௌகார் ஜானகி…..

Leave a Reply

Your email address will not be published.